தமிழ் சினிமாவில் வில்லனுக்கென ஒரு தனி அடையாளத்தையும் இலக்கணத்தையும் நிலைநிறுத்தியவர் நடிகர் எம்.என். நம்பியார். தனது வாழ்நாள் பயணத்தில் சுமார் 70 ஆண்டுகளை திரைவாழ்க்கையிலேயே கழித்த காலங்களால் அழியாத ஒரு வில்லனின் 104 பிறந்தநாள் இன்று. 


ஆளுமையான வில்லன்:


1  ஒரு படத்தின் கதாநாயகனின் வீரத்தையும் பலத்தையும் காட்சிப்படுத்த அவர்களுக்கு இணையான ஆளுமை கொண்ட ஒரு வில்லன் நிச்சயம் அவசியம். அப்படி ஓர் அக்மார்க் வில்லனாக திரையில் மிரட்டும் குரலாலும் கர்வமான பார்வையாலும் மக்களுக்கு அவர் மீது வெறுப்பு வரும் அளவிற்கு தத்ரூபமாய் காட்சியளித்த வலிமையான கலைஞன்.  


2  திரையில் வில்லன்களுக்கு எல்லாம் வில்லன்களாக கொடூரமானவனாக காட்சியளித்த நம்பியார் உண்மையிலேயே மிகவும் சாந்தமானவர். அவர் திரை பயணத்தை ஒரு காமெடியனாக தான் தொடங்கியுள்ளார். காலம் அவரை வில்லனாகியது. 


3  ஹீரோவாக வாய்ப்புகள் வந்தாலும் மக்கள் அவரை வில்லனாகவே ஏற்றுக்கொண்டதால் கதாநாயகனாக ஏற்க முடியவில்லை. அதனால் முழுநேர வில்லனானார் நம்பியார்.


 



4  எம்.ஜி.ஆர் நடித்த பெரும்பாலான திரைப்படத்தில் அவரின் ஆஸ்தான வில்லகனாக நடித்தவர் எம்.என். நம்பியார். இவர்கள் இருவரின் மேஜிக்கல் காம்போ 75 திரைப்படங்களில் தொடர்ந்தது. அதனால் நம்பியார் மக்களின் வெறுப்பையும் சாபத்தையும் சம்பாதித்தார். இது அவரின் நடிப்பிற்கு கிடைத்த வெற்றி.  


5 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த நம்பியார் ஜங்கிள் என்ற ஆங்கில படத்திலும் நடித்திருந்தார். தமிழில் மட்டுமே 750 படங்களில் நடித்தவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி  திரைப்படங்களிலும்  நடித்துள்ளார்.


6 1935ம் ஆண்டு தொடங்கிய அவரின் திரைப்பயணம் 2006ம் ஆண்டு வரை நீடித்தது. கடைசியாக அவர் நடித்தது நடிகர் விஜயகாந்தின் 'சுதேசி' திரைப்படத்தில்.


7 கல்யாணி, கஞ்சன், நல்ல தங்கை போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார். 


8 தமிழ் சினிமாவில் பிரதான வில்லனாக நம்பியார் கலக்கி வந்த சமயத்தில் ஆர்.எஸ். மனோகர், அசோகன், பி.எஸ். வீரப்பா என பல வில்லன்கள் பிரபலமாக இருந்தாலும் நம்பியாரின் இடத்தை கைப்பற்ற யாராலும் இயலவில்லை.


9 தனது உறவுக்கார பெண்ணான ருக்மணியை பெற்றோரின் விருப்பப்படி திருமணம் செய்து கொண்ட நம்பியாரின் திருமண வைபவத்தில் மாப்பிள்ளை தோழனாக இருந்தது எம்.ஜி.ஆர்.



10 காமெடியனாக தொடங்கிய பயணத்தில் வில்லனாக மிரட்டினாலும் கண்ணே பாப்பா, ரகசிய போலீஸ் 115 போன்ற திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பால் அசத்தியிருந்தார். 


11 திரையுலகில் ஆறு முதலமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றிய ஒரே நடிகர் எம்.என்.நம்பியார் என்ற பெருமையை பெற்றவர். 


12 தமிழ் சினிமாவின் ஆஸ்தான வில்லனுக்கு கிரிக்கெட் என்றால் அத்தனை இஷ்டமாம். படப்பிடிப்பில் இருந்தாலும் ரேடியோ மூலம் ஸ்கோர்களை கேட்டு தெரிந்து கொள்வாராம். 


13 திரைபிரபலங்கள் பெரும்பாலானோர் பப்ளிசிட்டியை  விரும்புவார்கள். ஆனால் நம்பியாருக்கு பேட்டி கொடுப்பது பத்திரிகையாளர்களை சந்திப்பது எல்லாம் அறவே பிடிக்காதாம்.


14  தீவிர ஐயப்ப பக்தரான நம்பியார் ஐயப்ப வழிபாட்டை தமிழகத்தில் பிரபலப்படுத்தியதில் மகா குருசாமி என அழைக்கப்பட்டவர். தொடர்ந்து 65 ஆண்டுகள் சபரிமலைக்கு சென்ற ஒரே குருசாமி என்ற பெருமையையும் பெற்றவர்.


15 தனித்துமான குரல் வளம் கொண்ட நம்பியாரின் கம்பீரமான குரலை இன்று மிமிக்கிரி ஆர்ட்டிஸ்டுகள் ஆள்கிறார்கள்.


16 திரையில் வில்லத்தனத்தை கொட்டும் நம்பியார் நிஜ வாழ்க்கையில் மனைவியின் பேச்சை தட்டாதவர். மனைவி சொல்வதே மந்திரம் என வாழ்ந்தவர்.


17 உடற்பயிற்சி என்பது அவரின் உயிர்நாடி போன்றது. திரை பயணத்தில் இருக்கும் வரை கட்டுக்கோப்பான உடலமைப்பை கொண்டிருந்தவர். இறப்பதற்கு சில காலங்கள் முன்னர் தான் பிள்ளைகளின் வற்புறுத்தலால் உடற்பயிற்சி மேற்கொள்வதை கைவிட்டுள்ளார். 


 




18 வெளியூரில் படப்பிடிப்பு என்றால் அவருடன் மனைவியையும் அழைத்து செல்லும் பழக்கம் கொண்ட நம்பியார் எங்கு சென்றாலும் மனைவி சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிடுவாராம்.


19 தற்காப்புக்காக குறுவாள் ஒன்றை என்றுமே தன்னுடன் வைத்திருந்தவர். எங்கு சென்றாலும் அந்த வாள் அவருடன் நிச்சயமாக இருக்கும். 


20 குழந்தை குணம் கொண்ட நம்பியார் ஷூட்டிங் சமயத்தில் ரசிகர்கள் அவரை பார்க்க வந்தால் கண்களை சுருக்கி மிரட்டலான பார்வையால் கைகளை பிசைந்து கொண்டு அவர்கள் பயமுறுத்தி ஓட விடுவாராம்.