தூத்துக்குடி அருகே பழிக்குப்பழியாக கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி ஆயுதங்களுடன் பதுங்கிய 5பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். 




தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் உத்தரவுப்படி திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் மேற்பார்வையில் தென் மாவட்டங்களில் கொலை, கொள்ளை, கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுப்பதற்கு பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இதன் விளைவாக இன்று ஓட்டப்பிடாரம் பகுதியில் சட்ட விரோத கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் ரகசியமாக கூடியிருப்பதாக ஓட்டப்பிடாரம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் பாலமுருகனுக்கு தகவல் கிடைத்ததையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவுப்படி மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் தலைமையில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமன், உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து அங்கு சட்ட விரோதமாக கூடியிருந்த 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 3 பெரிய அரிவாள்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.




விசாரணையில் குலசேகரநல்லூர் நடு தெருவைச் சேர்ந்த எட்டப்பன் மகன் முத்துமாரியப்பன், சீவலப்பேரி மடத்துப் பட்டியைச் சேர்ந்த செல்வகணபதி மகன் சிவமுருகன், ஆறுமுகநேரி செல்வராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்பாண்டி மகன் சிவபிரகாஷ்,திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் காமராஜ் நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் முத்துராமன் மற்றும் கவர்ணகிரி சுந்தரலிங்கம் நகரைச் சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் ஆகியோர் என்பதும், முத்துமாரியப்பன் என்பவருக்கும், குலசேகரநல்லூர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் மாயகிருஷ்ணன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது, 




இதன் காரணமாக 7 மாதத்திற்கு முன்னர் மேற்படி மாயகிருஷ்ணனை முத்து மாரியப்பன் அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் முத்துமாரியப்பனை கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 27.10.2022 அன்று முத்துமாரியப்பன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் விடுதலையானதையறிந்து மாயகிருஷ்ணன் மற்றும் அவரது தந்தை உட்பட சிலர் முத்துமாரியப்பனை அரிவாளால் தாக்கியுள்ளார். இதில் முத்துமாரியப்பன், மாயகிருஷ்ணனிடமிருந்து தப்பி காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் மதுரை சென்று அங்கு தங்கியிருந்துள்ளார். 




மதுரையிலிருந்த முத்துமாரியப்பன், மாயகிருஷ்ணனை தீர்த்துக்கட்டினால் தான் வாழமுடியும் என்று அவரை கொலை செய்வதற்காக மதுரையிலிருந்து திருநெல்வேலி சென்று அங்கிருந்து மற்ற 4 நண்பர்களையும் அழைத்துக்கொண்டு ஓட்டப்பிடாரத்திற்கு வந்து ரகசியமாக முத்துமாரியப்பன் வீட்டில் பதுங்கியிருந்ததும், இந்த கொலை சம்வத்தை அரங்கேற்றுவதற்கு அவர்களுக்கு நிறைய பணம் தேவைப்பட்டதால் ஒருவரை வழிமறித்து, அரிவாளை காண்பித்து மிரட்டி அவரிடமிருந்து ரூ.5000 கொள்ளையடித்துள்ளதும், இன்னும் பலரிடம் கொள்ளையடிப்பதற்கு திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.


3 அடுக்கு பாதுகாப்பில் சரியான தருணத்தில் மாவட்ட தனிப்பிரிவு உளவுத்துறையினர் ஆங்காங்கே துப்புகள் வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததால் கும்பல் சட்ட விரோதமாக கூடியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு தனிப்படை போலீசார் 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 3 பெரிய அரிவாள்களையும் பறிமுதல் செய்தனர்.




பழிக்குப்பழியாக கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய கும்பலை 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்தின் தீவிர கண்காணிப்பில் துரிதமாக செயல்பட்டு கொலையை தடுத்த ஓட்டப்பிடாரம் தனிப்பிரிவு காவலர் பாலமுருகன் மற்றும் மணியாச்சி காவல்துணை கண்காணிப்பாளர் லோகேஷ்வரன் தலைமையிலான தனிப்படையினரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.