திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டது என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


திருப்பதி ஏழுமலையான் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆந்திராவில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும். ’திருப்பதிக்கு சென்றால் திருப்பம் வரும்.’ என்று சொல்வதுண்டு. 


ஆன்லைன் டோக்கன்:


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்துவருகின்றனர். திருப்பதி வரும் பக்தர்கள் அங்கப்பிரதட்சனம் செய்தல், மொட்டையடித்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செய்வது வழக்கம். இதற்காகு டோக்கன் பெறுவதற்காக பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. பக்தர்களின் சுமையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், டோக்கன்களை வரிசையில் நின்று வாங்குவதற்கு பதிலாக, ஆன்லைனில் வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.




தேவஸ்தானம் அறிக்கை:


இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு திருமலையில் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், இந்த டோக்கன்கள் பெறுவதற்கு பக்தர்கள் 2 முதல் 5 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவந்தது. இனி அங்கப்பிரதட்சணம் செய்வதற்காக டோக்கன்கள் வாங்க காத்திருக்காமல் ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைன் மூலம் டோக்கன்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்த டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம். எனவே பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு டோக்கன்கள் முன்பதிவு செய்ய வேண்டும்" என்று திருப்பதி தேவஸ்தானம் வலியுறுத்தியுள்ளது. 


சொத்து மதிப்பு : 


திருமலை தேவஸ்தானத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்து மதிப்புகள் பற்றி திருப்பதி தேவஸ்தானம் கடந்த செப்டெம்பர் மாதம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன்படி, திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 85 ஆயிரத்து 705 கோடி ரூபாய் மதிப்புள்ள 960 சொத்துக்கள் உள்ளது.


”இவ்வளவு சொத்துக்கள் கோயிலுக்கு சேர திருப்பதி பாலாஜி மீது பக்தர்களுக்கு உள்ள நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையின் அடிப்படையில், பலரும் பணமாக, நகையாக, பொருளாக, அசையும் மற்றும் அசையா சொத்துக்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். மதம் கடந்தும் இந்த நம்பிக்கையின் வெளிப்பாடு இருப்பதையும் நாம் காண முடிகிறது. சமீபத்தில் கூட சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதி, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு  1.2 கோடி (ரூ.1,02,00,000) ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளனர். 


திருப்பதி தேவஸ்தானத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.2.26 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாவும், கடந்த மூன்றாண்டுகளில் முதலீட்டின் அளவு 2,900 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.