தாய், மகளை கொன்றவரை சுட்டுப்பிடித்த போலீஸ் - தூத்துக்குடியில் நடந்தது என்ன?
தாய், மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் ட்ரோன் கேமரா உதவியுடன் தேடப்பட்டு வந்த குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேலநம்பிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சீதாலட்சுமி (75). இவரது மகள் ராமஜெயந்தி (45). இருவரும் ஒரே வீட்டில் தனியாக வசித்து வந்தனர். சீதாலட்சுமியின் கணவர் பூவணன், ஓய்வுபெற்ற பள்ளி தலைமை ஆசிரியர். இந்த தம்பதியருக்கு ராதா, ராமஜெயந்தி என இரு மகள்கள், ராமசாமி என்ற மகனும் இருந்தனர். ராமஜெயந்தி திருமணமாகி கணவருடன் நெல்லையில் வசித்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக கணவரை பிரிந்து மேலநம்பிபுரம் வந்த ராமஜெயந்தி தாயுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் சர்ச்சுக்கு சென்று திரும்பியவர்கள், மாலை வரை வெளியே வரவில்லை. இந்நிலையில் சீதாலட்சுமி உறவினர் ஒருவர் போன் செய்துள்ளார். போனை வேறொருவர் எடுத்து பேசியுள்ளார்.
Just In
இதனால் சந்தேகமடைந்த அந்த நபர், பக்கத்து வீட்டுக்கு போன் செய்து சீதாலட்சுமி வீட்டில் இருக்கிறாரா என்று பார்க்குமாறு சொல்லியுள்ளார். அவர்கள் சென்று பார்த்த போதுதான் இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து தகவலறிந்து எட்டயபுரம் போலீசார் சென்று பார்த்தபோது சீதாலட்சுமி கழுத்து நெரித்தும் தலையணையால் அழுத்தியும், மகள் ராமஜெயந்தி கழுத்து நெரித்தும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
அவர்கள் இருவரும் அணிந்திருந்த தங்க நகைகளும் காணாமல் போயிருந்தன. எனவே 2க்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்து நகைக்காக இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வந்தனர். மேலும் வீட்டில் இருந்த பல லட்சம் மதிப்பிலான நகைகளும் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த முகேஷ் கண்ணன் (25), தாப்பாத்தி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் (18) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் சுற்றி வளைத்தபோது அவர்கள் தப்பியோடியதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர்களை பிடித்த போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
“தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்; தமிழகத்தில் இதை செய்யுங்கள்” – ஸ்டாலினுக்கு அமித்ஷா வேண்டுகோள்
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மேலநம்பிபுரத்தைச் சேர்ந்த முனீஸ்வரன் (25) என்பவர் அயன்வடமலாபுரம் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின் பேரில் நெல்லை சரக டிஐஜி (பொ) சந்தோஷ் ஹதிமணி, தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆகியோர் தலைமையில் 5 டிஎஸ்பிக்கள், 20 ஆய்வாளர்கள் அடங்கிய 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் காட்டுப்பகுதியில் 6 ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், காட்டுக்குள் பதுங்கியிருந்த முனீஸ்வரனை காவல்துறையினர் நேற்று சுற்றி வளைத்தபோது, உதவி ஆய்வாளர் முத்துராஜை அவர் வெட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, முனீஸ்வரனை துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த முனீஸ்வரன், காயமடைந்த எஸ்ஐ முத்துராஜ் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.