திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோரை வெளிநாடு அனுப்புவதாக கூறி ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரில் அழகாபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் முத்தழகு மாதவி தம்பதியினர். இவர்கள் விநாயகா ஏஜென்சி என்ற பெயரில் டிராவல்ஸ் ஏஜென்சி பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இவர்கள் திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள இளைஞர்களை கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் பல லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு வெளிநாட்டிற்கு அனுப்பாமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது.

 

திருவாரூர் அருகே வடகண்டம் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவர் முத்தழகு மாதவி தம்பதியினருக்கு தெரிந்தவர் ஆவர். இவரிடம் கனடா நாட்டில் வேலை வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கு தகுதியான இளைஞர்களை அழைத்து வரவும், குறைந்த பட்சம் ஒரு நபருக்கு மூன்று லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் இந்த தம்பதியினர் கமலக்கண்ணனிடம் கூறியுள்ளனர். இதனை நம்பி கமலக்கண்ணன் தன்னுடைய நண்பர்களை அணுகி உள்ளார். மணக்கால் அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் மகன் கதிர்வேல் என்பவர் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை கமலக்கண்ணன் மூலமாக முத்தழகு மாதவி தம்பதியினரிடம் வழங்கியுள்ளார்.



மேலும் இவர் மூலமாக ராஜேஷ், கண்ணன், ஆனந்த், நாவுக்கரசு, அண்ணாமலை, ஆகியோரும் பணத்தை வழங்கியுள்ளனர். இவர்கள் 5 பேர் மட்டும் இந்த தம்பதியினரிடம் 12 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் வெளிநாடு அனுப்பாமல் இருந்ததால் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். ஆனால் சரியான பதில் அளிக்காமல் பணம் கொடுத்தவர்களை ஏமாற்றி உள்ளதாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கூறுகின்றனர். தொடர்ந்து இவர்கள் தம்பதியினருக்கு நெருக்கடி கொடுத்த காரணத்தினால் இளைஞர்களுக்கு கனடா செல்வதற்கு விசா, மற்றும் பணி ஆணை மற்றும் விமான டிக்கெட் போன்றவை வழங்கியுள்ளனர். இதனைக் கொண்டு இளைஞர்கள் விமான நிலையம் சென்ற பொழுது இவை அனைத்தும் போலியானவை என தெரியவந்தது. இதனால் இளைஞர்கள் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர்.

 

மேலும் கடந்த 2 ஆண்டு காலமாக இளைஞர்கள் தொடர்ந்து பணத்தை திருப்பி கேட்டு வந்த நிலையில் அவர்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாகவும், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக காவல் துறையில் புகார் அளித்து உங்களை சிறையில் அடைத்து விடுவேன் என மிரட்டியதாகவும், சிலர் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி காரைக்குடிக்கு நேரடியாகச் சென்று முத்தழகு மாதவி தம்பதியினரிடம் பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் உடனடியாக பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார், அப்பொழுதும் பணத்தை திருப்பித் தராத தம்பதி மீது சிவகங்கை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் அதேபோன்று திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட இளைஞர்களும் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். உடனடியாக இந்த தம்பதியினரை கைது செய்து பாதிக்கப்பட்டுள்ள இளைஞர்களின் பணத்தை மீட்டுத் தருமாறும் காவல் துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இல்லை என்றால் சிவகங்கை மாவட்டம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.