திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி பூவனூர் ராஜ்குமார். இவர் வளரும் தமிழகம் கட்சியின் மண்டல இளைஞரணி செயலாளராகவும் இருந்து வந்தார்.  இந்த நிலையில் கடந்த வாரம் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றிற்காக ஆஜராகி விட்டு திரும்ப செல்லும்போது  கமலாபுரம் என்கிற இடத்தில் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

 

இதனையடுத்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு 12 மணி நேரத்தில் ஆறு குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த கொலை கடந்த 2021 ஆம் ஆண்டு நீடாமங்கலம் கடை தெருவில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சிபிஐ ஒன்றிய செயலாளர் நடேசன தமிழார்வனின் படுகொலைக்கு பழி தீர்க்கும் விதமாக நடந்துள்ளது என்பதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர். கைதான ஆறு பேரில் நடேசன தமிழார்வனின் மகன் ஸ்டாலின் பாரதியும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் பகுதியில் பதுங்கி இருந்த  திருவாரூர் அழகிரி காலனியைச் சேர்ந்த பிரவீன் வயது 22 என்பவரை காவல் துறையினர் கைது செய்ய சென்றபோது உதவி காவல் ஆய்வாளரை கொடுவாளால் தாக்கி விட்டு தப்ப முயன்றதால் அவனது இடது கால் முட்டிக்கு கீழ் சுட்டு பிடித்தனர். தற்போது மேலும் இந்த கொலையில் தொடர்பு உள்ள முக்கிய நபரான ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த காதர் பாட்ஷா மகன் ராஜா வயது 50 என்பவரை காவல்துறையினர் புதுக்கோட்டை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.



 

ராஜாவிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் ராஜா உள்ளிட்ட குற்றவாளிகள் கொலை நடப்பதற்கு முதல் நாள் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டு திருமண மண்டபத்தில் உள்ள ஒரு அறையில் அமர்ந்து கொலைக்கான திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது.மேலும் மன்னார்குடி நீடாமங்கலம் திருவாரூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் மூன்று குழுவினர் ராஜ்குமாரை கொலை செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாகவும் ராஜ்குமார் கமலாபுரம் நோக்கி செல்வதை தெரிந்து கொண்டு மன்னார்குடியில் இருந்த குழுவினர் காரில் வேகமாக வந்து ராஜ்குமார் கார் மீது மோது விபத்தை ஏற்படுத்தி படுகொலை செய்து விட்டு அந்த அரிவாளுடன் செல்பி எடுத்துக் கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.