அடுத்த குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்தவற்கான செயல்முறை, ஜூன் 15ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கலுடன் தொடங்குகிறது. தற்போது குடியரசு தலைவராக பதவி வகிக்கும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியோடு நிறைவடைகிறது. அடுத்த குடியரசு தலைவர் ஜூலை 25ஆம் தேதி பதவி ஏற்பார்.
குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் தேர்தல் சட்டம், 1952ஆம் ஆண்டின்படி, குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவருக்கான பதவிக்காலம் ஐந்தாண்டு காலம் ஆகும்.
குடியரசு தலைவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
குடியரசு தலைவர் தேர்தல் குறித்து உங்களுக்கு பல கேள்விகள் இருக்கலாம். அதற்கான பதில்கள் இதோ.
- குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி
- இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
- 35 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
- வேறு எந்த ஒரு மத்திய அரசின் பதவியிலோ மாநில அரசின் பதிவியிலோ இருக்க கூடாது.
- மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- இந்திய வாக்களராக பதிவு செய்திருக்க வேண்டும்.
- வேட்பாளரின் வேட்பு மனுவை குறைந்தது 50 வாக்காளர்கள் கையொப்பமிட்டு இருக்க வேண்டும்.
- ஆனால், குடியரசு தலைவராகவோ, துணை குடியரசு தலைவராகவோ, மாநிலத்தின் ஆளுநராகவோ, மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ அமைச்சராக இருந்திருக்கலாம்.
குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பது யார்?
இந்தியாவில் குடியரசு தலைவர் எலக்டோரல் காலேஜ் முறைப்படி தேர்வு செய்யப்படுகிறார். அதாவது, நாடாளுமன்ற இரு அவைகளின் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள், டெல்லி மற்றும் புதுச்சேரி உள்பட அனைத்து மாநில, யூனியன் பிரதேச சட்டப்பேரவையின் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் குடியரசு தலைவரை தேர்வு செய்கின்றனர்.
வாக்குப்பதிவு எப்படி நடைபெறுகிறது?
இந்திய அரசியலமைப்பு சட்டம் 55(3)இன் படி, ஒரு வாக்காளருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறைப்படி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு ரகசிய வாக்குச்சீட்டு முறைப்படி நடத்தப்படுகிறது.
வேட்புமனு தாக்கல் எப்படி நடைபெறுகிறது?
வேட்பாளரின் வேட்பு மனு பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்திருக்க வேண்டும். குறைந்தது 50 வாக்காளர்கள் அவரின் வேட்பு மனுவை முன்மொழிய வேண்டும்.
பின்னர், குறைந்தது 50 வாக்காளர்கள் அவரின் வேட்பு மனுவை ஆதரிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அறிவித்த காலக்கெடுவில், பொது விடுமுறையை தவிர்த்து மற்ற நாள்களில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம்.
வேட்பாளரோ அல்லது அவரை முன்மொழிந்தவர்களோ அல்லது ஆதரவு அளித்தவர்களோ வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம்.
செக்யூரிட்டி டெபாசிட்டாக 15,000 ரூபாயை பணமாகவோ அல்லது ரிசர்வ் வங்கியில் பணம் வேட்பாளரின் பெயரில் பணம் செலுத்தியதற்கான ரசீதியாகவோ தேர்தல் அதிகாரியிடம் வழங்க வேண்டும்.
அதேபோல, சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் வேட்பாளரின் பெயர் வாக்காளராக பதிவு செய்ததற்கான நகலை அளிக்க வேண்டும்.
தேர்தல் அதிகாரி யார்?
வழக்கமாக, மக்களவையின் செயலாளரும் மாநிலங்களவையின் செயலாளரும் சுழற்சி முறையில் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்கள்.
இந்த 2022ஆம் குடியரசு தலைவர் தேர்தலில் மாநிலங்களவை செயலாளர் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களவை அல்லது மாநிலங்களவை செயலகத்தின் இரண்டு மூத்த அலுவலர்களும் டெல்லி மற்றும் புதுச்சேரி உள்பட அனைத்து மாநில, யூனியன் பிரதேச சட்டப்பேரவையின் மூத்த அலுவலரும் துணை தேர்தள் அலுவலர்களாக நியமிக்கப்படுவார்கள்.
தேர்தல் எங்கு நடைபெறும்?
டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள அறையிலும் டெல்லி மற்றும் புதுச்சேரி உள்பட அனைத்து மாநில, யூனியன் பிரதேச சட்டப்பேரவை செயலக அலுவலகத்தில் உள்ள அறையிலும் தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்குச்சீட்டு இரண்டு வண்ணங்களில் அச்சிடப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பச்சை நிற வாக்குச்சீட்டிலும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இளஞ்சிவப்பு நிற வாக்குச்சீட்டிலும் வாக்கு செலுத்துகின்றனர்.
வேட்பாளர்களில் முதல் விருப்பத்தை பதிவு செய்வது மட்டுமே கட்டாயமாகும். இரண்டாவது விருப்பதை தேர்வு செய்வது கட்டாயம் அல்ல.
எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் வாக்குகளின் மதிப்பு என்ன?
சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்கு மதிப்பு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் மதிப்பு சமமாகவே மதிப்பிடப்படுகிறது.
எம்எல்ஏக்களின் வாக்கு மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது?
இந்திய அரசியலமைப்பு சட்டம் 55 (2) முறைப்படி, மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர்களின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. மாநிலத்தின் மக்கள் தொகையை (1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) குறிப்பிட்ட மாநிலத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட மொத்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை வகுக்க வேண்டும். வரும் எண்ணிக்கையை 1000த்தால் வகுத்த பிறகு வரும் எண்ணிக்கைதான் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்கு மதிப்பாக கணக்கிடப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் மதிப்பு எப்படி கணக்கிடப்படுகிறது?
மொத்த வாக்குகள் எண்ணப்பட்டு, அது மக்களவை (543) மற்றும் மாநிலங்களவையிலிருந்து (233) தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையோடு வகுக்க வேண்டும். அந்த வகையில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 708 ஆகும். கடந்த 2007ஆம் ஆண்டு குடியரசு தலைவர் தேர்தலில், மொத்தமுள்ள 776 எம்பிக்களின் வாக்கு மதிப்பு 549408 ஆக கணக்கிடப்பட்டது. மொத்தமுள்ள 4120 சட்டப்பேரவை உறுப்பினர்களின் மொத்த மதிப்பு 549474 என கணக்கிடப்பட்டுள்ளது. (டெசிமல் ரவுண்டிங் ஆஃப் செய்யப்பட்டதால் எண்ணிக்கை மாறுபடுகிறது)
குடியரசு தலைவர் தேர்தலில் எந்த ஒரு மாநிலத்திற்கோ மத்திய அரசுக்கோ முன்னுரிமை வழங்கப்படவில்லை. அனைவரும் சமமாக பார்க்கப்படுவதை அரசியலமைப்பு உறுதி செய்கிறது. பிரதமரை நியமினம் செய்வதற்கான பொறுப்பு குடியரசு தலைவரிடம் இருப்பதால் இம்மாதிரியான முறை பின்பற்றப்படுகிறது. எந்த ஒரு கட்சியோ கூட்டணியோ பெரும்பான்மை பெறாத பட்சத்தில், குடியரசு தலைவரின் அதிகாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
குடியரசு தலைவர் தேர்தலில் கட்சி தாவல் தடை சட்டம் பொருந்துமா?
எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள், தங்களின் விருப்பப்படி வாக்களிக்கலாம். கட்சி கொறடா உத்தரவின்படி செயல்பட தேவையில்லை.
யார் வசம் எத்தனை வாக்குகள் உள்ளன?
ஆதிக்கம் செலுத்தும் பாஜக கூட்டணி
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிடம் 48.66 சதவிகித வாக்குகள் உள்ளன. அதாவது, மக்களவை உறுப்பினர்களின் மூலம் 233800 வாக்குகளும் மாநிலங்களவை உறுப்பினர்களின் மூலம் 72800 வாக்குகளும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் மூலம் 218668 வாக்குகளும் இக்கூட்டணியின் வசம் உள்ளன. இக்கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பலவீனமாக உள்ள காங்கிரஸ் கூட்டணி
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 24.19 சதவிகித வாக்குகள் உள்ளன. அதாவது, மக்களவை உறுப்பினர்கள் மூலம் 77000 வாக்குகளும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மூலம் 37100 வாக்குகளும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் 146990 வாக்குகளும் இக்கூட்டணி வசம் உள்ளன. இக்கூட்டணியில் திமுக, தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
முடிவை தீர்மானிக்கும் மற்ற மாநில கட்சிகள்
திரிணாமூல் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இரண்டு கூட்டணியிலும் இடம்பெறாமல் தனித்து நிற்கிறது. இவர்களின் வசம் மக்களவை மூலம் 67,200 வாக்குகளும் மாநிலங்களவை மூலம் 49,700 வாக்குகளும் மாநில சட்டப்பேரவை மூலம் 1,76,136 வாக்குகள் உள்ளன.
வெற்றி முகத்தில் பாஜக கூட்டணி
குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு 50 சதவிகித வாக்குகள் தேவைப்படுகிறது. எனவே, பாஜக வெற்றி பெறுவதற்கு இன்னும் 1.34 சதவிகித வாக்குகள் தேவைப்படுகிறது. அதாவது, 13,000 வாக்குகள். முந்தைய குடியரசு தலைவர் தேர்தலிலும் முக்கிய சட்டங்களை நிறைவேற்றும்போதும் பெரும்பாலான நேரங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் பாஜக சார்பாகவே வாக்களித்துள்ளன. எனவே, இந்தமுறையும் அது தொடரும் பட்சத்தில், பாஜகவுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.