மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை பெற்று கொண்டு மோசடி செய்ததாக பெண்ணின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே கொட்டையூர் சர்வமான்யம் கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 32). டிரைவரான இவருக்கு அனிதா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதே ஊரை சேர்ந்த ராஜ்குமார் (40). இவருக்கு சுமதி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கொரடாச்சேரி அய்யம்பேட்டை லெட்சுமணன் (49) இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கொரடாச்சேரி வெள்ளமதகு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (40). இவர்கள் 4 பேரையும் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாக கூறி கொரடாச்சேரி பத்தூர் பனங்கரையை சேர்ந்த அழகேசன் என்பவரது மனைவி பாமா (வயது 40) என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் பணம் வாங்கியுள்ளார். இதில் முரளியிடம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும், ராஜ்குமாரிடம் ரூ.1 லட்சமும், லெட்சுமணன் என்பவரிடம் ரூ.80 ஆயிரமும், ரமேஷிடமிருந்து ரூ.90 ஆயிரமும் என ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை வாங்கியுள்ளார். இந்நிலையில் முரளி, ராஜ்குமார் ஆகிய இருவருக்கும் மலேசியா நாட்டிற்கான டிக்கெட், அங்கு வேலை செய்வதற்கான விசாவை பாமா கொடுத்துள்ளார்.
இதனை பெற்று கொண்டு இருவரும் மலேசியா நாட்டிற்கு சென்ற நிலையில், அங்கு சோதனை செய்த அதிகாரிகள் விசா போலியானது என்பதை கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து முரளி, ராஜ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து, பின்னர் விடுவித்ததாக இருவரும் கூறுகின்றனர். இதனையடுத்து அவர்கள் மீண்டும் ஊருக்கு திரும்புள்ளனர். இதுகுறித்து பாமாவிடம் கேட்டதற்கு சரிவர பதில் அளிக்காமல் காலம் கடத்தி வந்துள்ளார். மேலும் லெட்சுமணன், ரமேஷ் இருவரையும் மலேசியா நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட முரளி, ராஜ்குமார், லெட்சுமணன், ரமேஷ் ஆகிய 4 பேரும் தனது குடும்பத்தினருடன் திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அப்போது ஏற்கனவே கொரடாச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
மனுவை பெற்று கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் வெளிநாட்டு அனுப்பி வைப்பதாக மோசடி புகார் குறித்து உடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். புகாருக்கு ஆளான பாமாவிடம் இது சம்பந்தமாக கேட்ட பொழுது, நான் நான்கு பேரையும் ஏமாற்றவில்லை அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கான உண்மையான டிக்கெட் மற்றும் விசா ஆகியவற்றை கொடுத்திருந்தேன். ஆனால் அவர்கள் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பி வந்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இருப்பினும் நான் ஒரிஜினல் விசா அவர்களுக்கு கொடுத்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. ஆனால் அவர்கள் என்னை பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். அவர்கள் கொடுத்த பணத்தில் தான் நான் விசா மற்றும் டிக்கெட் எடுத்து கொடுத்தேன் என தெரிவித்தார்.