தஞ்சையில் மீன் வியாபாரியிடம் தகராறு செய்ததை தட்டிக் கேட்ட வாலிபரை கொடூரமாக இரண்டு பேர் வெட்டிக் கொலை செய்தனர். குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.



தஞ்சாவூர் அருகே பள்ளியக்ரஹாரம் சின்னக்கடை தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார் (33). இவர் பிள்ளையார்பட்டியிலுள்ள திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, பள்ளியக்ரஹாரம் கடை வீதியில் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு மீன் வியாபாரம் செய்துக் கொண்டிருந்த, ரெங்கன் என்பவரிடம், விஸ்வபிரசாத் என்பவர் தகராறு செய்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த பிரேம்குமார், விஸ்வபிரசாத்தை திட்டியுள்ளார்.

இதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், நேற்று மாலை மணக்கரம்பை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், விஸ்வபிராசத் அவரது நண்பர் மணிகண்டன்(36) இருவரும் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்றுக்கொண்டிருந்த பிரேம்குமாரை வழிமறித்து தகராறு செய்தனர்.

பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரேம்குமாரை சரமாரியாக வெட்டி விட்டு இருவரும் தப்பியோடி விட்டனர். இதில் படுகாயமடைந்த பிரேம்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆட்டோவில் ஏற்று மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிரேம்குமார் இறந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நடுக்காவிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர். இந்நிலையில் பிரேம்குமாரின் உறவினர்கள், பொதுமக்கள் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி, கும்பகோணம் சாலையில், மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த டவுன் டி.எஸ்.பி., ராஜா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, கொலையாளிகளை விரைந்து கைது செய்வதாக கூறி, சமாதானம் செய்தார். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


 






தஞ்சை அருகே வெவ்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலியாகினர்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியை சேர்ந்த கருணாகரன் மனைவி கஸ்தூரி (45). இவர் தஞ்சை அடுத்து சூரக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு வந்து விட்டு தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பஸ் ஏறிய சில நிமிடத்தில் வாசல் அருகே கஸ்தூரி நின்று கொண்டிருந்தார். தனியார் பஸ் வளைவில் வேகமாக திரும்பிய போது பஸ்சிற்குள் நின்று கொண்டிருந்த கஸ்தூரி திடீரென படிக்கட்டின் வழியாக வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று கஸ்தூரி உடலை தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதேபோல் தஞ்சையை அடுத்த ஈச்சங்கோட்டை பகுதியை சேர்ந்த மாதவன் என்பவர் மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து ஈச்சங்கோட்டைக்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற காரை முந்த முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த மாதவன் சம்பவஇடத்திலேயே பலியானார். இதுகுறித்து மாதவனின் தாய் சாந்தி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.