திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே வடக்கு மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவருடைய மனைவி அமுதா வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். அதில் முதல் பெண்ணிற்கு திருமணம் நடைபெற்று கணவர் வீட்டில் வசித்து வருகிறார். இரண்டாவது பெண் கும்பகோணத்தில் உள்ள விடுதியில் தங்கி பயின்று வருகிறார். வீட்டில் துணைக்கு யாரும் இல்லாததால் அமுதா தனது எதிர் வீட்டில் உள்ளவர்களுடன் இரவில் மட்டும் அங்கு சென்று தங்கி வருவது வழக்கம்.
இந்த நிலையில் எப்பொழுதும் போல் நேற்று இரவு எதிர் வீட்டில் அமுதா தங்கி விட்டு இன்று காலை வீட்டை வந்து பார்க்கும்பொழுது வீட்டின் முன்பக்க கதவு கடப்பாரையால் உடைக்கப்பட்டு வீட்டில் உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 21 சவரன் தங்க நகைகள் ஐம்பதாயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. அதனையடுத்து கொரடாச்சேரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் சோதனை நடத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வடபாதிமங்கலம் அருகே நெடுங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர். இவர் லெட்சுமாங்குடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி மற்றும் கனிஷ்கா என்கிற ஒன்பது வயதில் ஒரு மகள் ஆகியோருடன் தனது வீட்டில் வசித்து வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருத்துறைப்பூண்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இன்று காலை வீட்டிற்கு வந்த பொழுது வீட்டின் முன்பக்க கதவு கடப்பாரையால் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அதனையடுத்து வடபாதிமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் வீட்டின் பூட்டை கடப்பாரையால் உடைத்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இந்த இரண்டு சம்பவங்களையும் ஒரே கும்பல் நடத்தி இருக்கலாமா என்கிற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.