திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வசந்த நகரில் வசித்து வந்தவர் கூலித்தொழிலாளி நாராயணன் வயது (52). அவரது மனைவி கனகவல்லி வயது (46) இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார் அவர் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து அனைத்து மக்களையும் காப்பாற்றுவதற்காக அனைத்து பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று. தமிழ் நாடு அரசு அறிவித்து வரும் வேலையில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு குறுஞ்செய்தி அவர்களுடைய தொலைபேசிக்கு வரும். மேலும் தமிழ்நாடு முழுவதும் செலுத்தி கொண்டவர்களுக்கு குறுஞ்செய்தி வராமலும், தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு குறுஞ்செய்தி வருவதாக பல பகுதியில் பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்து வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இறந்த நபருக்கு தடுப்பூசி செலுத்தியதாக குறுஞ்செய்தி வந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 22.05.2021ஆம் தேதி போளூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் தவணை தடுப்பூசியை நாராயணன் செலுத்திக் கொண்டார். முதல் தவணை தடுப்பூசி செலுத்திய எட்டு நாட்கள் கழித்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். உறவினர்கள் அனைவரும் அவருக்கு இறுதிச் சடங்கை செய்து முடித்தனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த வாயூர் கிராமத்தில் நேற்று முன்தினம் 28ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆறு மாதத்திற்கு முன்பு இறந்த நாராயணன் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும், அவர் இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டது போல் நேற்று மாலை அவரது கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியை பார்த்த அவரது உறவினர்கள் அந்தச் சான்றிதழை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து இன்று போளூர் மருத்துவமனையில் கேட்டதற்கு உரிய பதில் அளிக்காமல் விசாரித்துச் சொல்கிறோம் என்று மருத்துவமனையில் தெரிவித்ததாக நாராயணனின் உறவினர்கள் தெரிவித்தனர்.
ஆறு மாதத்திற்கு முன்பு இறந்தவருக்கு இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டதாக சான்றிதழ் வழங்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரமணா திரைப்படத்தில் இறந்தவருக்கு சிகிச்சை அளிப்பது போல் 6 மாதத்திற்கு முன்பு இறந்த கூலித் தொழிலாளிக்கு கடந்த 28ம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்தியது போல் மருத்துவ நிர்வாகம் சான்று வழங்கியது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் மீளாத நிலையில் இதுபோன்ற சான்றிதழ்கள் வருவதால் பொதுமக்கள் இடையே தடுப்பூசி குறித்து பெரும் அச்சம் அச்சம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்நாடு அரசு ஒருபக்கம் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு முயற்சி எடுத்து வருகிறது. மறுபக்கம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளையும் உங்களது மாவட்டத்தில் அனைத்து பொதுமக்களும் 100% தடுப்பூசி செலுத்த வேண்டுமென மறுப்பக்கம் அழுத்தம் கொடுக்கப்படுவதால் அனைத்து அதிகாரிகளும் சீக்கிரம் நமது மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத வேண்டும் என்பதற்காக இதுபோன்ற முறையற்ற செயல்களில் ஈடுபட்டுவருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துவருகின்றனர்.