நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் ஆள் கடத்தல் (தடுப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதாவை  (2021) மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது. மனித உரிமைகளை மிகப்பெரிய  அளவில் மீறும் குற்றங்களாக கருதப்படும் ஆள்கடத்தல் (மனித வணிகம்) தொடர்பாக இந்தியாவில் இதுவரை சட்டங்கள் இல்லை. மனித வணிகத்தால் தெற்கு ஆசிய நாடுகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. ஆள் கடத்தல் தடுப்புச் சட்டம் கடந்த 2018ம் ஆண்டே, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களைவையில் நிறைவேற்றப்படாததால் மசோதா காலாவதியானது. 


முன்னதாக, இந்த மசோதா குறித்து கருத்து தெரிவித்த பெண்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம், "தனி நபர்களை, குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கு மரியாதை வழங்கி, ஆதரவான சட்ட, பொருளாதார மற்றும் சமூக சூழலியலை உருவாக்குவது சட்டத்தின் நோக்கமாகும்" என்று தெரிவித்தது.      


இருந்தாலும், இந்த மசோதா பல்வேறு முரண்களை கொண்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆள்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பாலியால் தொழிலுக்காக கடத்தப்படுகிறார்கள் (அல்லது) பாலியல் தொழிலில் பணிபுரியும் அனைவரும் ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற தவறான கற்பனை அடிப்படையில் மசோதா கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.         




உதாரணமாக, ஒரு மனிதனை பாலியல் தொழிலுக்காகவும், உழைப்புச் சுரண்டலுக்காகவும், உடல் உறுப்பு பாகங்களுக்காகவும் கடத்துபவர் ஆள்கடத்துபவர் என்று மசோதா அடையாளம் காண்கிறது. மேலும், பாதிக்கப்பட்டவரிடம் விருப்பத்தைப் பெற அச்சுறுத்தல (threats) ஆள் கடத்தல் (abduction), ஏமாற்றுதல் (deception), கட்டாயப்படுத்துதல்(force), அதிகார துஷ்பிரயோகம் செய்தல், (abuse of power) பணம் பொருள் தருவதாக ஆசை காட்டுதல் (giving or receiving of payment or benefits) ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த வகையான குற்றங்களுக்கு பாதிக்கப்பட்டவரின் ஒப்புதல் எப்போதுமே பொறுத்தமற்றது.    


இதன் காரணமாக, மனித வணிகத்துக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில், முழு ஒப்புதலுடன் செயல்படுகிற வயதுவந்த பாலியல் தொழிலாளர்களின் மனித உரிமைகள் மீறப்படும் சூழல் உருவாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். 


மேலும், உள்நாடு மற்றும் சர்வதேச எல்லையைக் கடக்கும் ஆவணமின்றி புலம்பெயர்வோர் அனைவரும் ஆல்கடத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று மசோதா அடையாளம் காண்கிறது. ஆனால், நாட்டுக்குள் முறையற்ற வகையில் நுழையும் அனைவருமே சுரண்டப்படுபவரகளாக கருதமுடியாது. உதாரணமாக, உள்நாட்டு நிலவரம் காரணமாக, மியான்மரில் இருந்து இந்தியாவுக்கு வந்தவரகளை  சட்டவிரோதமாக நுழைபவர்கள் என்று தான் மத்திய அரசு வகைப்படுத்தியது. அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியது. புலம்பெயர்ந்தோரை மறுவாழ்வுக்கான மையத்தில்  அடைக்கப்படுவதன் மூலம் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கை கதைகளை செல்லாததாக ஆக்கிவிடுகிறது.   


இந்தியாவில் விபச்சாரம் தடை செய்யப்பட்ட ஒன்றா?   


உண்மையில், இந்த கேள்வி மிகவும் சட்ட சிக்கலானது.  1956 ஆண்டு விபச்சார தடுப்பு சட்டத்தின் படி, பால் புணர்ச்சி அல்லது மனிதனை அவமானப்படுத்தும் (விபச்சார) செயலில் வியாபார நோக்கத்தோடு (இத்தொழிலை வாழ்க்கையாக கொள்ளுதல் ) விபச்சாரியை பயன்படுத்தும் விபச்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் புழங்கும் இடத்திலிருந்து 200 மீட்டருக்குள் விபச்சாரம் செய்தால் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, 200 மீட்டருக்குள் அப்பால் உள்ள இடத்தில் முழு ஒப்புதலுடன் செயல்படுகிற வயதுவந்த பாலியல் ஈடுபாடுகளை இச்சட்டம் தடை செய்யவில்லை. 


ஆனால், தற்போதைய மசோதா வயது வந்த பெண்ணின் சம்மதம் எப்போதுமே பொறுத்தமற்றது  என்று கூறுவதன் மூலம் வாடிக்கையாளர்களையும், விடுதி உரிமையாளர்களையும்  குற்றவாளியாக்குகிறது. இதன், பாலியல் தொழிலாளர்களின் பாதுகாப்பு வளையத்தை முற்றிலும் தகர்க்கும் செயலாக அமைந்துவிடும். 




இந்தியாவில் 80 லட்சம் பேர் ஆள்கடத்தலில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (national crime records bureau) 2019 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் 2163 மனித கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தம் 6616 பேர் மீட்கப்பட்டனர் . 75% வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதில்லை


மறுவாழ்வு மையம்: பாதிப்புக்கு ஆளானோர் மீட்கப்பட்டவுடன், மறுவாழ்வுக்கான  மையத்தில் ஆதரவான சட்ட, பொருளாதார மற்றும் சமூக சூழலியலை உருவாக்க மசோதா முனைகிறது.  மாநில அரசுகள் நேரடியாகவோ (அல்லது) என்.ஜி.ஒக்கள் மூலமாகவே மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே உள்ள மையங்களை இதற்கு பயன்படுத்திக் கொள்ள மாநிலங்களுக்கு  அனுமதியளிக்கப்படுகிறது. 


பெரும்பாலான மாநிலங்களில் ஏற்கனவே செயல்பட்டு வரும் மறுவாழ்வு மையங்கள் இழுத்து மூடும் நிலையில் தான் உள்ளன. உதாரணமாக, கடந்த நிதியாண்டில் இருந்து தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கான தேசிய சிறார் தொழிலாளர் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், சிறப்பு பயிற்சி மைய சிறார்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.400 ஊக்கத்தொகையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. திட்டங்களுக்காக எந்த நிதியும் விடுவிக்கப்படாததால், சிறப்பு பயிற்சி மையங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. 



மேலும், மறுவாழ்வுக்கான இல்லங்களில் பாலியல் சேவைகளை வழங்க நிர்பந்திக்கப்படும் போக்கும் நம் நாட்டில் காணப்படுகிறது. உதாரணமாக, கடந்தாண்டு பீகார் மாநிலம் முசாபர்பூரில் பெண்கள் காப்பகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை நிகழ்வு இதற்கு எடுத்துக்காட்டு. இந்த வழக்கில், அம்மாநிலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 19 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். கண்மூடித்தனமான வன்முறை அடங்கிய மீட்பு நடைவடிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை மேலும் சிதைத்துவிடும்.ஓவ்வொரு மறுவாழ்வு மையங்களும் அடக்குமுறையின் குறியீடாக உள்ளதென என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  


பாலியல் தொழிலாளர்கள் தொடர்பான சொல்லாடல்?


பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைச் சூழல் ஏற்படுத்திய நிர்பந்தத்தின் கீழ் பெண்கள் பாலியல் தொழிலில் நுழைந்திருக்கின்றனர். எனவே, அதற்கான காரணங்கள் சரி செய்யப்பட்டு, புதுவாழ்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற வசனங்களை நாம் சினிமாவில் கடந்து வந்திருப்போம். பெண்கள், இயல்பாகவே, ஒழுக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வதில்லை. நடந்து கொள்வதும் தவறு என்ற ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாகத் தான் இத்தகைய சொல்லாடல்கள் ஆதிக்கம் பெற்று இருக்கின்றன. 


பாலியல் தொழிலை ஒழுக்கத்துக்கு மாறாக கருதுவது,  நிர்வாக ஆவணங்கள் என்ற புலம்பெயர்தலை சட்ட விரோதமாக கொள்வது, குற்றமாகவும், வன்முறை வெளிப்பாடாகவும் கருதுவது மேல்தட்டு கலச்சாராத்தின் குறிப்பிட்ட கண்ணோட்டமாக மட்டுமே இருக்கக்கூடும்.  


மேலும், வாசிக்க: 


THE TRAFFICKING IN PERSONS (PREVENTION, CARE AND REHABILITATION) BILL, 2021 


ஆள்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதைப் பற்றிய கொள்கை கையேடு 


என்.ஜி.ஒ sangram-ன் ஆய்வு அறிக்கை