திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பருவதமலை உச்சியில்  மல்லிகார்ஜுனர் உடனுறை பிரமராம்பிகை கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பவுர்ணமி நாட்களை தவிர அனைத்து நாட்களிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவு வந்து சாமி தரிசனம் செல்கின்றனர். அதனை தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகத்துடன் கூடிய தங்கும் அறை பக்தர்கள் உணவு கூடம் கழிவறை ஆகியவைகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும் தென் மகாதேவமங்கலம் கிராமத்தில் இருந்து மலை அடிவாரம் வரை தார் சாலை போடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கோயிலின் உச்சியில் சாமியின் எதிரில் வைக்கப்பட்டுள்ள கோயில் உண்டியல் ஆறு மாதத்திற்கு ஒருமுறை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு வருவது வழக்கமாகி வருகிறது.



அதே போல் நேற்று முன்தினம் இரவு கோயில் உண்டியல் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதனை வெளியில் சொல்லாமல் மறைப்பதற்காக இந்து சமய  அறநிலையத்துறை அதிகாரிகள் காட்டன் துணி மூலம் திருடுபோன உண்டியலை மூடி வைத்துள்ளனர். மேலும் உண்டியலில் இருந்து எவ்வளவு பணம் திருடு போயுள்ளது என்று இதுவரையில் காவல் துறையினரிடம் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் புகார் செய்யாமலும் வெளியில் சொல்லாமலும் இருந்து வருகின்றனர். மேலும் பருவதமலை உச்சிக்குச் செல்லும் பக்தர்களில் 100 நபர்களில் 70% சதவிகிதம் நபர்கள் போதைக்கு அடிமையானவர்கள் மட்டுமே சென்று வருவதாக தன்னார்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் உண்மையான பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து வருகின்றது. அதோடு மட்டுமல்லாமல் மலையின் உச்சியில் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் மது பாட்டில்கள் குவிந்து கிடக்கிறது.



இதனை தொடர்ந்து குடிபோதையில் செல்பவர்களை தடுத்து நிறுத்த வனத்துறையில் போதிய ஆட்கள் இல்லாததால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெறுகிறது. கள்ளக்காதலர்கள் வந்து தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளும் இடமாகவும் தற்போது பருவதமலை மாறி உள்ளது. இதனால் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைய தொடங்கி உள்ளது. மேலும் வரும் சித்ரா பௌர்ணமி அன்று பல லட்சம் பக்தர்கள் வருகை தரலாம் அவர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் குறித்து இதுவரை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் எந்த ஒரு கூட்டமும் நடத்தாதது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பருவதமலை உச்சியில் உள்ள கோயில் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடி சென்றது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.