திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாதுமலையில் அரசவெளி என்ற மலைக்கிராமத்தில் உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நம்மியம்பட்டை சேர்ந்த செவத்தான் என்பவரின் மகன் சிவகாசி வயது (15) 10ம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவன் சிவகாசியின் முகத்தில் முகப்பரு கட்டி இருந்துள்ளது. இதனால் மாணவன் அவதிப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 28-ம் தேதி பள்ளியின் சார்பில் அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர், சிவகாசியின் தந்தைக்கு இரவு 9 மணியளவில் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு சிவகாசியின் முகம் வீங்கி உடல்நிலை மோசமாக உள்ளது. இதனால் நீங்கள் வந்து உங்களுடைய மகனை அழைத்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
அதன் பிறகு சிவாகாசியின் தந்தை சேவத்தான் பள்ளிக்கு சென்று மகனை பார்த்துள்ளார். அப்போது மாணவனின் முகம் வீங்கி பேசமுடியாத நிலையில் இருந்துள்ளார். இதனைக்கண்ட தந்தை சேவத்தான் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சிவகாசி தந்தையிடம் பேசியபோது, மாணவன் மெதுவாக தன்னுடைய முகத்தில் இருந்த முகப்பரு கட்டியணை ஆசிரியர் மகாலட்சுமி ஊசியால் குத்தினார். இதனால் தன்னுடைய முகத்தில் இருந்த கட்டியில் ரத்தம் வந்தது. சில மணி நேரத்திற்கு பிறகு முகம் விங்கியது என்று தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து, சிவகாசியை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். மறுநாள் காலையில் நம்மியம்பட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் மாணவனின் முகம் மிக மோசமான நிலைக்கு சென்றதாலும், மாணவனால் நடக்கமுடியாமல் இருந்ததால் உடனடியாக பெற்றோர் சிவகாசியை மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கும் மாணவனின் உடல் நிலை மோசமான நிலைக்கு சென்றதால் ஆம்புலன்ஸ் மூலமாக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். பின்னர் சில மணிநேரங்களில் சிவகாசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜமனாமரத்தூர் காவல்நிலையத்தில் மாணவனின் தந்தை செவத்தான் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஜமுனா மரத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஆசிரியரி மகாலட்சுமியிடம் பேசுகையில்,
பள்ளியில் பயின்று வரும் சிவகாசிக்கு சில நாட்களாக சூடு கட்டி வந்தது. அதில் இருந்து சிவகாசி அவதிப்பட்டு வந்தார். சிவகாசி சூடு கட்டியில் இருந்து சீவு போன்றது வெளியேறியது. அதனை நான் துணியின் மூலம் தான் துடைத்தேன். அதன் பிறகு சிவகாசி தனது தந்தைக்கு போன் செய்தான். ஆனால் அவர் தொலைபேசியை எடுக்கவில்லை, சிறிது நேரம் கழித்து சிவகாசியின் தந்தை அழைத்தார். அப்போது நான் சிவகாசிக்கு உடல் நிலை மோசமாக உள்ளது என்று தெரிவித்தேன். அப்போது மாணவனின் அண்ணன் பள்ளிக்கு வந்து மாணவனை வீட்டிற்கு அழைத்து சென்றார். சிவகாசியை வீட்டிற்கு அழைத்து சென்று மறுநாள் கழித்து தான் மாணவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மாணவனின் உடல் நிலை மோசமாக சென்றதால் வேலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் மாணவன் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதை கேட்ட எனக்கு மிகவும் மனது வலித்தது. நன்றாக இருந்த மாணவன் உயிரிழந்தது வருத்தமாக உள்ளது. மாணவன் சிவகாசிக்கு முகத்தில் சூடு கட்டி தான் இருந்தது முகப்பரு இல்லை, அதனை நான் ஊசியால் குத்தவில்லை சூடு கட்டியில் இருந்து சீவு போன்றது வெளியேறியது. அதனைதான் துணியால் துடைத்தேன் அப்போது சகமாணவர்களும் இருந்தனர். ஆனால் நான் ஊசி வைத்து குத்தியதாக காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்து உள்ளனர். இவர்கள் இப்படி புகார் அளிப்பதற்கு காரணம் அப்பகுதியில் உள்ள அதிமுக கட்சியில் உள்ள பிரமுகர்கள் தான் மாணவன் இறப்பை வைத்து அரசியல் செய்கிறார்கள். எப்படியாவது நான் என்னை இங்கு இருந்து வெளியேற்றி விடலாம் என பார்க்கிறார்கள் என்று தெரிவித்தார்.