பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம், கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நாட்பட்ட கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். எஸ்.பி.பி. உயிரிழந்த நிலையில் அவரது ரசிகர்களாலும் திரையுலகத்தினராலும் அவரது பிறந்தநாள் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது. எஸ்.பி.பி.,யின் பாடல்கள் மட்டுமின்றி, அவரது பழைய பேட்டிகளும் கேட் இனிமையானவை. இதோ பேட்டி ஒன்றில் அவர் பகிர்ந்திருந்த பெர்சனல் அனுபவங்கள் குறித்து காணலாம்.
”ஆந்திராவின் சித்தூர் மாவாட்டத்தில் கோனேரிப்பட்டில்தான் பிறந்தேன்.அது இப்போது தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுவிட்டது. நாங்கள் லோயர் மிடில் க்ளாஸ் பார்ப்பன சமூகம்.வீட்டில் நான் தான் மூத்த பையன்.எனக்கு அடுத்து ஆறு பேர். எனது தங்கை பாடகி ஷைலஜா கடைசியில் இருந்து இரண்டாமவராகப் பிறந்தார். அப்பாவுக்கு கதாகலாட்சேபம் தான் தொழில். கோவில் விழாக்களில், இறப்பு வீடுகளில், திருமண வீடுகளில் பாடுவார். நாளொன்றுக்கு நூறு ரூபாய்.அதில் அவருக்கு 50 ரூபாய்தான் கிடைக்கும். அதில்தான் குடும்பம் நடந்தது. என் உறவினர் ஒருவர்தான் என்னைப் படிக்க வைத்தார். திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் ஏ.எம்.ஐ படித்தேன். படித்துக் கொண்டிருக்கும்போது நிறைய பாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வேன்.
அப்படி ஒரு பாட்டுப் போட்டியில்தான் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. பாடகர் ஜானகி அம்மா நடுவர். அவர் முன்பு பாடவேண்டும். பாடினோம். அவர் கோபப்பட்டு,’இந்த பையன் தானே நல்லா பாடறான் இவனுக்குதானே முதல் பரிசு தரணும்’ என போட்டி அமைப்பாளரிடம் சண்டை போட்டு எனக்கு முதல் பரிசு வாங்கிக் கொடுத்தார். ‘நீ ஏன் சினிமாவில் பாடக் கூடாதுனு’ கேட்டார். எனக்கு சினிமா பின்னணி பாடகர்க்கான முதல்விதை அவர் போட்டதுதான். அதன் பிறகு தெலுங்கில் அப்போது வளர்ந்து வந்த ஒரு இசையமைப்பாளர் அவர் படத்தில் எனக்குப் பாட வாய்ப்பு கொடுத்தார்.அதுதான் திரையுலகில் எனது முதல் பாடல். அதன் பிறகு எம்.ஜி.ஆர் நடித்த படம் ஒன்றுக்கு தெலுங்கில் நானும் எல்.ஆர்.ஈஸ்வரி அம்மாவும் பின்னணி பாடல் ஒன்றை டப்பிங்கில் பாடியிருந்தோம். அதை எம்.ஜி.ஆர் கேட்டு இருக்கிறார். அப்போது அடிமைப்பெண் பட சூட்டிங். கே.வி. மகாதேவன் இசை. ஒரு குறிப்பிட்ட பாடலை நான் பாடினால் எப்படி இருக்கும் என அவர் மகாதேவன் சாரிடம் கேட்க. அவர் மறுப்பேதும் சொல்லாமல் என்னைப் பாட அழைத்தார். அப்போதுதான் ஜெய்ப்பூரில் ஒரு பாடல் சூட்டிங்குக்காக இருந்தேன். திரும்பி வந்ததும் காய்ச்சல், டைபாய்ட், டாக்டர் ரெஸ்ட் எடுக்கச் சொல்லிவிட்டார். அவ்வளவுதான் பாடல் வாய்ப்பு போச்சுனு இருந்தேன்.z
அழுகையா வந்தது. உடல்நிலை கொஞ்சம் சரியாச்சு. எனக்கு அடிமைப்பெண் புரொடக்ஷன் டீமிலிருந்து அழைப்பு வந்தது. என்னைப் பார்க்க எம்.ஜி.ஆர். அவர் வீட்டுக்கு அழைத்ததா சொன்னாங்க. பாடுற வாய்ப்பை இழந்ததால் என்னை பார்த்து சமாதானம் செய்யக் கூப்பிட்ருக்கார்னு நினைச்சேன். ஆனால் பாட்டு ரிகர்சல் நடந்துச்சு. எனக்காக மொத்த டீமும் வெயிட் செய்துருக்காங்கனு அப்போதான் தெரிஞ்சது. பாடி முடிச்சதும் பத்திரிகையாளர்கள் மற்ற தயாரிப்பாளர்களைக் கூப்பிட்டு ‘இவர்தான் தம்பி பாலு. இனி என் படங்களில் எல்லாப் பாடல்களும் இவர்தான் பாடனும்னு சொல்லலை ஏதாச்சும் ஒரு பாடலைப் பாடினால் நன்றாக இருக்கும். இது எனது படத் தயாரிப்பாளர்களிடம் நான் வைக்கும் கோரிக்கை” என்றார். எம்.ஜி.ஆர். சொன்ன பிறகு திரையுலகத்தில் மறுப்பேது. அப்படிதான் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக எனக்குப் பாட வாய்ப்பு கிடைத்தது” என்றார்!
மறைந்த பாலசுப்ரமணியத்தின் அவரது இன்றைய பிறந்தநாளில் அவரது பாடல்களுடன் அவரை நினைவு கூர்வோம்.
‘
’