திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பாண்டியன்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனியார் பேருந்து ஓட்டுநர் முருகன் வயது (27). இவர் செய்யார் பகுதியை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவியை, பள்ளியை விட்டு வீட்டிற்கு வந்துகொண்டு இருந்த போது மாணவியிடம் முருகன் ஆசைவார்த்தைகள் கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனிடையே மாணவியின் பெற்றோர்கள் இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ஓட்டுநர் முருகனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து (22.06.2022) அன்று முன் ஜாமின் மூலமாக முருகன் வெளியே வந்தார்.
மறுநாள் மாணவியின் குடும்பத்தினர் முருகன் வீட்டிற்கு சென்று ‘உன்னை நாங்கள் கொல்லாமல் விட மாட்டோம்’ என மிரட்டல் விட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் இருந்து முருகன் எங்கு சென்று வருகிறார் என்று மாணவியின் குடும்பத்தினர் கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவதன்று காலையில் முருகன் வீட்டின் பின்புறம் உள்ள நீலகிரி தோப்பிற்கு காலைக்கடனை முடிப்பதற்கு சென்றார். அப்போது பாதிப்புக்கு உள்ளான மாணவியின் தந்தை தணிகைமலை , அவருடைய மகன் சுரேஷ் மற்றும் வேல்முருகன் உள்ளிட்டோர் முருகனை பின்தொடர்ந்தது சென்று அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகனை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முருகனை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து உயிரிழந்த முருகனின் மனைவி தூசி காவல் நிலையத்தில் தன்னுடைய கணவனை திட்டமிட்டு தணிக்கைமலையும் அவருடைய மனைவி மற்றும் இரண்டு மகன்களும் சேர்ந்து கொலை செய்ததாக கூறி புகார் அளித்துள்ளார். மேலும், சிறுமியின் உறவினர்கள் தணிகை மலை (45), வேல்முருகன் (26), தேவிகா (40), சுரேஷ் (21), விக்னேஷ் (19) ஆகிய 5 நபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், ‘முருகனுக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ள நிலையில், அவர் தங்கள் வீட்டு 13 வயதுடைய சிறுமியை காதலிப்பதாக கூறி, அவரின் மனதை கலைத்து, நாங்கள் வீட்டில் இல்லாத நேரத்தை முருகன் பயன்படுத்தி சிறுமி என்று பாராமல் பாலியல் வன்கொடுமை செய்து அவளுடைய வாழ்க்கை சீரழித்து விட்டார். இதனால் நாங்கள் கடந்த 6 மாதங்களாக மனவேதனையில் இருந்தோம். ஆனால் ஜாமினில் வெளியே வந்த முருகன் சுதந்திரமாக வெளியில் சுற்றியதால் எங்களுக்கு உண்டான கோபத்தால், நாங்கள் முருகனை நோட்டமிட்டு வெட்டி கொலை செய்தோம்’ என காவல்துறையினரிடம் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்