தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர், பாடகர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர் என பல அவதாரங்கள் எடுத்து பன்முகக் கலைஞராக வலம் வருபவர் கங்கை அமரன்.
நடிகர் பிரேம்ஜி, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோரின் தந்தையான கங்கை அமரன் கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் திரையுலகில் இயங்கி வருகிறார்.
’படகோட்டி பாட்டு கேட்டு வாலிக்கு லெட்டர்...’
இந்நிலையில், வாலிபக் கவிஞர் என புகழப்பட்டவரும், தமிழ்த் திரையுலகில் முக்கியமான பாடலாசிரியருமான வாலி, மெல்லிசை மன்னர் எனப் புகழப்படும் பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் குறித்த சுவாரஸ்யத் தகவல்கள், அவர்களுடனான தன் பிணைப்பு ஆகியவை குறித்து கங்கை அமரன் பகிர்ந்துள்ளார். அவர் பேசியவை பின்வருமாறு:
”மன்னன்’ படத்தில் க்யூவில் நின்று சண்டை போட்டு டிக்கெட் எடுத்துப் போவது போல் போய் தூத்துக்குடியில் ’படகோட்டி’ படம் பார்த்தோம். அந்தப் படம் பார்த்துவிட்டு வந்து ஒவ்வொரு பாடலாலும் அதிகம் ஈர்க்கப்பட்டோம். ஒவ்வொரு பாட்டும் பாட்டு வரிகளும் அவ்வளவு நன்றாக இருக்கும்.
’ஜாதகம் பார்ப்பார்...’
பின்னர் பாடல் எழுதிய வாலியின் முகவரியைக் கண்டறிந்து, நான் கங்கை அமரன், உங்களிடம் அசிஸ்டெண்டாக சேர வேண்டும் என விடாமல் லெட்டர் எழுதி வந்தேன். ரொம்ப அருமையான மனம் கொண்டவர்.
மேலும் ஒரு நேர்க்காணலில் அவர் கூறினார். வைரமுத்துவின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிடாமல் குறிப்பிட்டு, ”அவர் வந்ததும் எல்லாரும் என்னை ஒதுக்கி விட்டார்கள். ஆனால் ’வாழ்வே மாயம்’ படத்தில் அனைத்து பாடல்களையும் அமரன் எழுத வைத்தார். அவரால் தான் நான் இப்படி இருக்கிறேன். அந்த நன்றியை என்றும் மறக்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.
வாலி ஜாதகக் கட்டமைப்பு குறித்து இளையராஜாவுக்கு சொல்லுவார். ”அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்” பாடலில் அவர் எழுதிய வரிகள் வேறு. ஆனால் பாடும்போது ஒட்டாததால் நான் அதை மாற்றிவிட்டேன். நான் அவரிடம் உரிமை எடுத்துக் கொள்வேன். அவரும் கொஞ்சம் வாக்குவாதம் செய்து விட்டு உனக்கு வேண்டுமென்றால் மாற்றிக் கொள் என விட்டு விடுவார்” எனக் கூறியுள்ளார்.
எம்.எஸ்.வி இல்லைனா...
மேலும், எம்.எஸ்.விஸ்வநாதன் குறித்து பேசிய கங்கை அமரன், ”அவர் இல்லை என்றால் எங்கள் குரு ஜி.கே.வெங்கடேஷ் கிடையாது. அவர் இல்லையென்றால் இளையராஜா கிடையாது. நான் கிடையாது. வாழ்வின் ஆதாரம் எம்.எஸ்.வி தான். நாங்கள் எல்லாம் அவர் பாட்டைக் கேட்டு வளர்ந்தவர்கள். கம்பத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் எங்கள் வீடு உள்ளது.
அமானுஷ்யப் படமான ’நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தை கம்பத்துக்கு நடந்து போய் எம் எஸ் விக்காக கேட்டு ரசித்து விட்டு பயத்துடன் வீடு திரும்புவோம்” என்றும் தெரிவித்துள்ளார்.