திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கீழ்வில்லிவலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை வயது (40) இவர் கட்டிட தொழில் செய்து வருகிறார். இவர் வந்தவாசி பகுதியில் தன்னுடைய வேலையை முடித்துக்கொண்டு ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயற்சித்தபோது பணம் வரவில்லை அதன் பிறகு அருகில் இருந்தவர்களிடம் கேட்டுள்ளார் அதற்கு அங்கு இருந்தவர்கள் உங்களுடைய ஏடிஎம் கார்டு காலவதி ஆகிவிட்டது நீங்கள் வங்கி  சென்று புதிய  கார்டு வாங்கி  கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர்.



இந்தநிலையில் வந்தவாசி சன்னதி தெருவில் உள்ள வங்கியில் காலாவதியான ஏ.டி.எம். கார்டுக்கு பதிலாக புதிய கார்டு வாங்கினார். இதை பதிவு செய்வதற்காக அதேப்பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார். அப்போது ஆங்கிலத்தில் வந்த வார்த்தைகளை பார்த்து திணறியுள்ளார். அப்போது அங்கிருந்த செங்கம் தாலுகா புதிய குயிலம் கிராமத்தை சேர்ந்த கர்ணன் என்பவரது மகன் சரண்ராஜ் (31) என்பவர் ஏழுமலைக்கு உதவி செய்வது போன்று, அந்த ஏ.டி.எம். கார்டை வாங்கி ஓ.டி.பி. நம்பர் ஏழுமலை செல்போனுக்கு வந்ததும்,  சரண்ராஜ் ரகசிய நம்பரை பதிவு செய்தார். பின்னர் தான் வைத்திருந்த மற்றொரு ஏ.டி.எம். கார்டை ஏழுமலையிடம் கொடுத்து அனுப்பி விட்டார். அவர் சென்றதும் புதிய ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி அதில் இருந்த 9 ஆயிரம் வீதம் 2 முறை 18 ஆயிரத்தை ஏழுமலை கணக்கில் இருந்து எடுத்துள்ளார். 



ஏழுமலை வீட்டுக்குச் சென்று செல்போனை பார்த்தபோது பணம் எடுத்ததாக அதில் குறுஞ்செய்தி வந்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வந்தவாசி தெற்கு காவல்நிலையத்தில்   புகார் கொடுத்துள்ளார். துணை காவல் கண்காணிப்பாளர்  விஸ்வேஸ்வரய்யா தலைமையில் துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி மற்றும் காவலர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் சரண்ராஜ் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வந்தவாசி சன்னதி தெருவில் ஏ.டி.எம். மையங்களில் இதேபோன்று மோசடி செய்வதற்காக சுற்றிக் கொண்டிருப்பதாக தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அங்கு சென்று பார்த்த போது ஏடிஎம் மையம் அருகே இருந்த சரண்ராஜை  கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் உடற்கல்வி ஆசிரியருக்கு படித்து விட்டு மாநில கபடி மற்றும் கோ-கோ போட்டிகளில் நடுவராக இருந்தவர் என்பதும், விழுப்புரம் பகுதிகளில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து  18 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.