திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் புதுகாமூர் பகுதியில் வசித்து வரும் தம்பதி மணிகண்டன் - ரேவதி. இவர்களுக்கு 10 வயதில் ஷாலினி என்ற மகளும், 8 வயதில் ராகுல் என்ற மகனும் உள்ளனர். மணிகண்டன் கனரக வாகனம் ஓட்டும் டிரைவராக இருந்து வந்துள்ளார். அவ்வபோது வேலை காரணமாக அடிக்கடி வெளியூர் சென்று வருவதை வழக்கமாக கொண்டு இருந்தார்.
இந்தநிலையில், மணிகண்டனின் நண்பனான கோகுல்ராஜ் என்பவர் பெங்களுரில் வசித்து வந்த ஜீவிதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். மேலும், கோகுல் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஆரணிக்கு அழைத்து வந்து நண்பன் மணிகண்டனின் வீட்டின் அருகில் மற்றொரு வீடு எடுத்து தங்கியுள்ளார்.
இதையடுத்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் வெளியூருக்கு லாரி ஓட்ட சென்றதால் அவரது மனைவி ரேவதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மணிகண்டனின் நண்பன் கோகுல்ராஜ் மற்றும் மற்றொரு நண்பனான ஜெயசூர்யா ஆகியோர் மதுபோதையில் மணிகண்டனின் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்பொழுது, மணிகண்டனின் மனைவி ரேவதி தனியாக வீட்டில் இருந்ததை அறிந்த கோகுல்ராஜ் மற்றும் ஜெயசூர்யா ஆகியோர் கூட்டாக ரேவதியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தொடர்ந்து, இருவரும் ரேவதியை மிரட்டி வீடியோ எடுத்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, பயந்துபோன ரேவதி தன் கணவர் ஊரில் இருந்து வந்ததும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்துள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன் தனது மனைவியுடன் சென்று ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணை மேற்கொண்டதில், கோகுல்ராஜ் மற்றும் ஜெயசூர்யா இருவரும் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்து அதனை செல்போனில் வீடியோ எடுத்ததாகவும், ரேவதியை கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஒப்பு கொண்டுள்ளனர். இதனையடுத்து 2பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட ரேவதியை ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்