திருவண்ணாமலை மாவட்டம் காட்டாம்பூண்டி அடுத்த பெரிய கல்லப்பாடி ஊராட்சி பகுதியில் ஒரு பிரிவைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். அந்த தெருவில் உள்ள தேவாலயம் அருகே அப்பகுதி சிறுவர்கள் ப்ரீ பையர் (free fire) கேம் விளையாடியதாக கூறப்படுகிறது. அருகில் உள்ள அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள்,சம்பவத்தன்று மது அருந்திவிட்டு, தேவாலயம் அருகே அமர்ந்துள்ளனர். அப்போது அங்கு ப்ரீ பையர் கேம் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர்கள், ‛ மொட்ட சிவா... கெட்ட சிவா...’ கேம் என அவர்களுக்குள் கிண்டலடித்து விளையாடியுள்ளனர்.
அப்போது, அங்கு மது போதையில் அமர்ந்திருந்த மூன்று பேரில் ஒருவர் மொட்டை அடித்திருந்துள்ளார். தன்னை தான் சிறுவர்கள் கேலி செய்கிறார்கள் என்று ஆத்திரமடைந்த அந்த நபர், கேம் விளையாடிய சிறுவர்களை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் இரண்டு பிரிவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.தனது தம்பியை அடித்த ஆத்திரத்தில், அப்பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர், அண்ணா நகர் பகுதிக்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று தேவாலயம் முன்பு கூடிய அப்பகுதி மக்கள், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த நபர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளனர். இதனை அறிந்த அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். பின்னர் உடனடியாக 10க்கும் மேற்பட்ட நபர்கள் அடியாட்களுடன் வந்து, கொடூர ஆயுதங்களுடன் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் அங்கு உள்ள தேவாலயம் மீதும் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள ஒரு சில வீடு மற்றும் கடைகளை அடித்து நொறுக்கி உள்ளனர்.
பின்னர் கலவரத்தில் ஈடுபட்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு தரப்பைச் சேர்ந்த காந்தி, சங்கீதா, பிரபா, சபரி, முத்து உள்ளிட்ட 5 நபர்களுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர், மேலும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சௌந்தரராஜன் தலைமையில், உதவி காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், ரமேஷ் உள்ளிட்டவர்கள் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பெரிய கல்லாபட்டி கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மீண்டும் சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.வருவாய்த்துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அமுல் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும் மோதல் நடந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் இது குறித்து அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கலை குமார், முத்துராசு ,ராஜா, பாண்டிதுரை, பாரதி உள்ளிட்ட பல்வேறு நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.சிறுவர்களின் பிரீ பையர் கேம் விளையாட்டால் இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.