திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த சித்தாலப்பாக்கம் கிராமத்தை சார்ந்த விவசாயி ரவிச்சந்திரன் (50). இவர்  கடந்த மாதம் 30ஆம் தேதி வயல்வெளி பகுதிக்கு சென்ற பிறகு இவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை. இந்நிலையில், கடந்த 4ஆம் தேதி அதே கிராமத்தில் வேர்க்கடலை பயிரிட்டுள்ள விளைநிலத்தில் பாழடைந்த கிணற்றின் அருகே ரவிச்சந்திரன் உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளது. தகவலறிந்த டிஎஸ்பி செந்தில், தூசி ஆய்வாளர் அண்ணாதுரை, மற்றும் காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்குகாக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும், ரவிச்சந்திரனின் மகன் அஜித்குமார் தன்னுடைய  தந்தையின் மரணத்தில் மர்மம் உள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் தூசி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், நிலத்தில் பயிரிட்டுள்ள வேர்க்கடலை செடிகளை பாழாக்கும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ரவிச்சந்திரன் இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை அங்கு இருந்து தொடங்கினர்.



அதன்படி, அங்குள்ள எல்லா விளை நிலங்களிலும் மின்வேலி அமைக்கப்பட்டு ஒரு நிலத்தில் மின் வேலிக்கு பதிலாக வெறும் நூல் கயிறு மட்டும் கட்டியிருந்ததும் தெரியவந்தது. அந்த நிலம் ரவிச்சந்திரனின் பக்கத்து நிலத்துக்காரர் வெங்கடேசன் மகன் துளசி (29) என்பவருடைய நிலம் என்பது தெரியவந்தது. மேலும், கடந்த 4 ஆம் தேதி முதல் துளசி கிராமத்தில் இல்லை என்பதும் தெரிந்தது. எனவே, அவரது நிலத்தில் அமைத்துள்ள மின்வேலியில் சிக்கிதான் ரவிச்சந்திரன் இறந்திருக்கலாம் என தீர்மானித்து, தலைமறைவான துளசியை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று காலையில் துளசி மீண்டும் கிராமத்திற்கு வந்துள்ள தகவலை அறிந்த காவல்துறையினர், விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்தனர். அதன் பின்னர் துளசியிடம் விசாரணை மேற்கொண்டுடனர்.


 அப்போது துளசி கூறிய வாக்குமூலத்தில் கூறியது; 


சம்பவத்தன்று இரவு காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவதற்காக என்னுடைய விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி ரவிச்சந்திரன் இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நான், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகப்படும் படி இருக்க, அவரது சடலத்தை கிணற்றில் வீச முடிவு செய்தேன். அதன்படி, மறுநாள் இரவு 7 மணியளவில் அங்கு சென்று ரவிச்சந்திரனின் சடலத்தை அவரது நிலத்தில்  உள்ள பாழடைந்த கிணற்றில் தூக்கி வீசினேன். கிணற்றில் அங்கு புதர் மண்டி கிடந்ததால் சடலம் கிணற்றில் உள்ளே விழாமல் கரையோரமே கிடந்தது. பிறகு, சடலத்தை கிணற்றுக்குள் தள்ள பார்த்தேன், ஆனாலும் என்னால் முடியவில்லை. எனவே, சடலத்தை அப்படியே விட்டு வீட்டிற்கு வந்து விட்டேன்.



இந்நிலையில், ரவிச்சந்திரன் மின்வேலியில் சிக்கிதான் இறந்துள்ளார் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதால் நான் தலைமறைவாக இருந்தேன். ஆனால், 3 நாட்கள் ஆகியும் காவல்துறையினர் யாரும் தேடி வராததால், என் மீது காவல்துறைக்கு சந்தேகம் வரவில்லை  என கருதி மீண்டும் வீட்டிற்கு வந்தேன். அப்போது, காவல்துறை என்னை கைது செய்து விட்டார்கள். இவ்வாறு அவர் கூறியதாக காவல்துறையினர் வட்டாரத்தில் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து தூசி காவல்நிலைய ஆய்வாளர் அண்ணாதுரை, நிலத்தில் மின்வேலி அமைத்ததற்காக  துளசியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார். மின்வேலியில் சிக்கி பலியான விவசாயி சடலத்தை, அவரது பக்கத்து நிலத்துக்காரரே கிணற்றில் வீசி தப்பிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.