இந்தியாவில் இந்துக்களால் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளும் மிகவும் முக்கியமானது நவராத்திரி.


9 இரவுகள் என்று அர்த்தப்பட்டாலும் கூட 10 நாட்கள் விழா இருக்கும். துர்கை அன்னையைப் போற்றும் விழா இது. அன்னையின் 9 அவதாரங்களையும் ஒவ்வொரு நாளும் நினைவுகூர்ந்து இந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது.


சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி ஆகிய 9 தேவிகளையும் நவராத்திரியின் 9 நாட்களிலும் ஒவ்வொரு நாளில் பூஜித்து வழிபடுவர். நவராத்திரியின் நிறைவு நாள் விஜயதசமி. அன்றைய தினம் தான் தசரா கொண்டாடப்படுகிறது.


கொல்கத்தாவிலும் இன்னும் பிற வடமாநிலங்களிலும் இந்த வரிசையில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.


தொடங்கியாச்சு நவராத்திரி:


இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா இன்று தொடங்குகிறது. அக்டோபர் 7 ஆம் தேதியான இன்று தொடங்கிய இந்த விழா வரும் 15 ஆம் தேதி சரஸ்வதி பூஜை, அடுத்த நாள் 16 ஆம் தேதி விஜயதசமியுடன் முடிவு பெறுகிறது.


நவராத்திரி சிறப்பம்சங்கள்:


முதல் நாளில் சைலபுத்ரிக்கு பூஜை. முதல் நாளான இன்று (அக்டோபர் 7ம் தேதி) சைலபுத்ரிக்கு பூஜை செய்யப்படுகிறது. பிரதீபாத திதியில் இந்த பூஜை செய்யப்படுகிறது.


இரண்டாம் நாளான நாளை அக்டோபர் 8 ஆம் தேதியன்று த்வித்திய திதி அமைந்துள்ளது. இதில் நவதுர்கையின் இரண்டாவது அம்சமான பிரம்மச்சாரிணி தேவிக்கு பூஜை செய்யப்படுகிறது.


மூன்றாம் நாளான அக்டோபர் 9 ஆம் தேதியன்று திரிதியா திதி வருகிறது. இந்தத் திதியில் நவதுர்கையின் மூன்றாவது அம்சமான கூஷ்மாண்ட தேவிக்கு சந்திரகாந்த பூஜை செய்யப்படும்.


நான்காவது நாளில், அதாவது அக்டோபர் 10 ஆம் தேதியன்று பஞ்சமி திதியில் ஸ்கந்தமாதாவிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட வேண்டும்.




ஐந்தாம் நாளில் சஷ்டி திதி வருகிறது. அக்டோபர் 11 ஆம் தேதி வரும் நவராத்திரியின் ஐந்தாவது நாளில் காத்யாயிணியை பூஜித்தால் எல்லா நன்மைகளும் வந்து சேரும்.


ஆறாம் நாளில் சப்தமி திதி வருகிறது. சப்தமொ திதியில் காளராத்திரி தேவிக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.


ஏழாவது நாள் அஷ்டமி திதி. அன்று மகா கெளரிக்கு பூஜை அரங்கேற்றப்படும். அக்டோபர் 13 ஆம் தேதி 7 ஆம் நாள் பூஜை வருகிறது.


எட்டாம் நாளில் நவமி திதி. அன்றைய தினம் சித்திதாத்திரி தேவிக்கு சிறப்பு பூஜை செய்யப்படும். அக்டோபர் 14ல் நவமி திதி வருகிறது.


நவராத்திரியின் இறுதி நாள் அக்டோபர் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அன்றைய தினம் தசமி திதி நடைபெறுகிறது. தசமி திதியில் தான் விஜய தசமி கடைபிடிக்கப்படுகிறது. மேலும், இதுவே நவராத்திரியின் இறுதி நாளாகவும் கருதப்படுகிறது. இந்த நிறைவு நாளில் துர்கா தேவிக்கு தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது.


மகிசாசுரன் வதமும் நவராத்திரியும்:


நவராத்திரி கொண்டாட்டத்திற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்ய கதை இருக்கிறது. சிவபெருமானிடம் சக்தி தேவி தாய் வீட்டுக்குச் செல்ல அனுமதி கேட்க, அவர் 9 நாட்கள் அனுமதி தருகிறார். துர்கா தேவி அவ்வாறு புறப்பட அவருக்கு மகிசாசுரன் பற்றி தெரிய வருகிறது. பிரம்மனிடம் பெற்ற வரத்தால் ஆணவத்தில் அடங்கா அட்டூழியங்களை மகிசாசுரன் செய்து வருகிறான் . இதனால் பார்வதி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று சக்திகளும் ஒன்றிணைந்து மகா காளியாக துர்கா உருவெடுக்கிறார். கடும் தவத்தின் விளைவாக அவர் மகிசாசுரனை வதம் செய்கிறார். இந்த வதத்தால் சக்தியின் பெருமை உலகெங்கும் பரவுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அவரை நினைவுகூரவே இந்த நவராத்திரி கடைபிடிக்கப்படுகிறது. துர்கைக்கு இதனலாயே மகிசாசுர மர்த்தினி என்ற பெயரும் விளங்குகிறது. நவராத்திரியின் இறுதி நாளில் ராவணன், மேகநாதர் மற்றும் கும்பகர்ணனின் பெரிய உருவ பொம்மைகளை உருவாக்கி அதனை தீ வைத்து எரித்து மக்கள் கொண்டாடுகின்றனர். 


புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள்.  வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும். ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள். நவராத்திரியைக் கொண்டாடுவதால் அம்பிகையின் அருளை நாமும் பெறலாம் எனப் பெரியோர்கள் கூறுகின்றனர்.