திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த படவேடு கிராமத்தில் ரேணுகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குமார் என்பவர் தரை வாடகைக்கு எடுத்து அதில் கட்டிடம் கட்டி செல்வமூர்த்தி என்பவரிடம் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 9 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு மாத வாடகை 3000 ரூபாய்க்கு கடையை விட்டுள்ளார். மேலும் கடந்த ஆண்டு குமார் இறந்து விட்டார். அதன் பிறகு அவருடைய மகனான ராமு கடையை எடுத்து நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அவர்களிடம் சென்று ராமு தங்களிடம் கடையை ஒப்படைக்குமாறு செல்வமுர்த்தியிடம் கேட்டுள்ளார். அதன் பிறகு செல்வமுர்த்தி கடையை ஒப்படைக்க முடியாது என தெரிவித்துள்ளார். இதனால் ராமு கிராமத்தில் உள்ள முக்கிய நபர்களிடம் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி கடை வழங்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் செல்வமுர்த்தி கடையை ஒப்படைக்காமல் செல்வமூர்த்தியின் மகன்கள் ஜீவா மற்றும் உதயா ஆகியோர் ராமுவிடம் தகறாரில் ஈடுபட்டு கத்தியால் ராமுவை தலையில் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ராமுவை அக்கம் பக்கத்தில் உள்ள கடைக்காரர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த சம்பவம் தொடர்பாக தன் மனைவி அடித்து துன்புறுத்தியதாக ராணுவத்தில் பணியாற்றும் பிரபாகரன் என்பவர் தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் முதற்கட்ட விசாரணை நடத்தி ராணுவ வீரரின் மனைவிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் ராணுவ வீரர் பிரபாகரன் அவரது நண்பர் வினோத் என்பவரிடம் தொலைபேசியில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் ராணுவ வீரர் பிரபாகரன் பேசியது, தான் செய்துள்ள காரியம் தமிழ்நாடு அளவில் பெரியதாக பேசப்படும் என்றும், தான் வெளியிட்ட வீடியோவை சுமார் ஆறு கோடிக்கு மேற்பட்ட நபர்களுக்கு மேல் பார்த்துள்ளார்கள் என்றும், தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய கட்சியை சேர்ந்த நபர்கள் தன்னிடம் பேசி வருகிறார்கள் என்றும், இந்த வீடியோவை குறித்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் போன்றவைகள் எல்லாம் நடைபெறும் என்றும், தன் மனைவியை அடிபட்டதாக கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கோரியும் , இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரியதாக போகிறது, நடைபெறும் சம்பவம் ஒன்றுக்கு இரண்டாக வெளியில் சொல்லுங்கள் எனவும், எங்கு சென்றாலும் ஒன்றுக்கு இரண்டாக பேச வேண்டும் என தனது நண்பருடன் பேசிய ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ராணுவ வீரர் பிரபாகரன், அவருடைய மனைவி கீர்த்தி மற்றும் மைத்துனர்கள் உதயா, ஜீவா ஆகியோருடன் சதி திட்டம் தீட்டியதாக செல்போனில் பேசிய வினோத் உள்ளிட்டோர் மீது சந்தவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதில் ராணுவ வீரருடன் செல்போனில் சதி திட்டம் தீட்டிய வழக்கில், பிரபாகாரனுடன் போனில் உரையாடிய வினோத்தை சந்தவாசல் போலீசார் கைது செய்தனர். வழக்கு பதிவு செய்ததை அறிந்த ராணுவ வீரரின் மைத்துனர் உதயா, ஜீவா ஆகியோர் தலைமறைவாகியிருந்தனர். அவர்களை காவல்துறையினர் தனிப்பட்டை அமைத்து இருவரை தேடி வந்தனர். இன்று அவர்கள் இருவரையும் தனிப்பட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.