திருவண்ணாமல (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. ஏனெனில் திருவண்ணாமலையில் இருந்து பெங்களூர், சேலம், திருப்பத்தூர், தருமபுரி, செல்லும் பேருந்துகள் அனைத்தும் செங்கம் வழியாக பேருந்து நிலையத்திற்கு சென்று தான் செல்லவேண்டும். மேலும் செங்கம் சுற்றிலும் அதிக அளவில் கிராமங்கள் உள்ளது‌. யார் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் செங்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து தான் சொல்ல வேண்டும், இதனால் மக்கள் நடமாட்டத்துடன் எப்போழுதுமே பரபரப்பாக பேருந்து நிலையம் காணப்படும். இந்த நிலையில், அந்த பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் திருநங்கையிடம் பணம் கேட்டு பிரச்னை செய்துள்ளதாக கூறப்படுகிறது. 


 




போதை ஆசாமியை உருட்டு கட்டையால் நையப் புடைத்த திருநங்கைகள்


செங்கம் அருகே உள்ள வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் செங்கம் பகுதியில் உள்ள சுஜாதா என்ற திருநங்கையுடன் பழக்கம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இளைஞர் விக்னேஷ் இரவு கஞ்சா போதையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. திருநங்கை சுஜாதாவிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் பணம் தர மறுத்து இங்கு இருந்து செல்லுமாறும் திருநங்கை விக்னேஷிடம் கூறியுள்ளார். ஆனால் அங்கு இருந்து செல்லாமல் தொடர்ந்து திருநங்கையிடம் பணம் கேட்டு விக்னேஷ் தொந்தரவு செய்து வந்துள்ளார்.‌ இதனால் ஆத்திரமடைந்த திருநங்கை விக்னேஷிடம் வாக்குவாததில் ஈடுபட்டுள்ளார். அப்போது அருகில் இருந்த திருநங்கை சுஜாதாவின் தோழிகள் சேர்ந்து இளைஞரை உருட்டுக்கட்டையால் தாக்கி உள்ளனர். இதனால் அச்சம் அடைந்த இளைஞர் அங்கு இருந்து ஓட்டம் பிடித்துள்ளார். ஆனால் திருநங்கைகள் விக்னேஷை விடவில்லை. ஓடிய  விக்னேஷை திருநங்கைகள் விடாமல் விரட்டி விரட்டி அடித்தனர்.


 




போதை ஆசாமியை காப்பாற்றி அழைத்து சென்ற போலீசார் 


இதனால் பேருந்து நிலையத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது. பின்பு இளைஞரை விரட்டி அடித்ததைப் பார்த்த காவல்துறையினர் அந்த இளைஞரை மீட்க முயன்றனர். காவல்துறையினர் இளைஞரை அங்கு இருந்து மீட்டனர். அப்போதும் காவல்துறையினர் முன்பும் திருநங்கைகள் இளைஞரை அடிக்க முற்பட்டனர். பின்னர் இருசக்கர வாகனத்தில் விக்னேஷை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தை அங்கு இருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. இந்த சம்பவம் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.