கலசபாக்கம் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு துணை ராணுவ வீரரின் மகனை கடத்தி கொலை செய்த பெண்ணிற்கு ஆயுள் தண்டனை அளித்து திருவண்ணாமலை நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா வெளுங்கனந்தல் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் துணை ராணுவத்தில் பணியாற்றியவர். இவரது மனைவி பரிமளா, இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் வினோத் என்ற வினோத்குமார் வயது (12)  கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந் தேதி பள்ளிக்கு சென்றுள்ளார். அதன்பின்னர் வினோத்குமார் வீடு திரும்பவில்லையாம். பின்னர் வினோத்குமாரை அவருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கலசபாக்கம் காவல்நிலையத்தில் ராமகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த சமயத்தில் ராமகிருஷ்ணனின் தொலைப்பேசிக்கு தொடர்பு கொண்ட மர்மநபர்கள், வினோத்குமாரை கடத்தி வைத்திருப்பதாக தெரிவித்தனர். 


 




அதனைத்தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் மாயமான வினோத்குமாருடன் பள்ளியில் படித்து வந்த ஒரு மாணவன் வினோத்குமாரை பள்ளியில் இருந்து அழைத்து சென்றுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அவனிடம் காவல்துறை விசாரணை நடத்தியதில் சாந்தி என்ற பெண் தான் வினோத்குமாரை அழைத்து வர சொன்னதாக அவர் கூறியுள்ளார். பின்னர் சாந்தியிடம் காவல்துறை விசாரணை நடத்தியதில், அவருக்கு பல லட்சம் ரூபாய் கடன் இருந்ததால் வினோத்குமாரை பணம் பறிக்கும் நோக்கத்தில் கடத்தியதும், காவல்துறை விசாரணை நடத்துவதை அறிந்ததும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று சிறுவன் வினோத்குமாரை கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்ததையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து சாந்தியையும், சம்பந்தப்பட்ட மாணவனையும் காவல்துறையினர் கைது செய்தனர்.


 




 


மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் சாந்தியின் நண்பர்களான சென்னையை சேர்ந்த சுபாஷ், பசுபதி ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மேலும் வினோத் குமார் கொலை சம்பவத்தின்போது அதில் தொடர்புடைய மாணவனுக்கு 15 வயது என்பதால் திருவண்ணாமலை சிறார் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இவ்வழக்கை விசாரணை நடத்திய மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜமுனா தீர்ப்பு கூறினார். அதில் சிறுவன் வினோத்குமாரை கடத்தி கொலை செய்த குற்றத்திற்காக சாந்திக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 35 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் சுபாஷ் மற்றும் பசுபதி மீது போதிய சாட்சியங்கள் இல்லாததால் அவர்களை விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து சாந்தி பலத்த காவல்துறை காவலுடன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண