ஏமாற்றி கர்ப்பிணியாக்கப்படும் இளம் பெண்கள்: புதிய பார்முலாவில் நடந்த குழந்தை விற்பனை அம்பலம்!

இளம் பெண்களை ஏமாற்றி, அவர்களை கருத்தரிக்க வைத்து அந்த சூழ்நிலையை பயன்படுத்தி பெற்றோருக்கு தெரியாமல் பிறக்கும் குழந்தையை விற்று பணம் பார்த்து வந்த கும்பல் சிக்கியுள்ளது.

Continues below advertisement

வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தில் பிறந்த ஆண் குழந்தையை விற்பனை செய்து திருமணம் செய்ய மறுத்ததோடு வேறு பெண்னை திருமணம் செய்ததால் குழந்தையின் தாய் வந்தவாசி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்ததில் குழந்தை விற்பனை செய்த 4 பேரை கைது செய்தனர்.

Continues below advertisement

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தைச்சேர்ந்தவர் பவானி(27) . அதே கிராமத்தைச்சேர்ந்த சரத்குமார்(29) என்பவரும் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து, வந்ததாக தெரிகின்றது. இளம்பெண் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்கேயே சென்று சரத்குமார் தங்கி இருந்ததாக  கூறப்படுகின்றது.


இருவரும் திருமணம் செய்யாமலேயே உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் பவானி கர்ப்பமானார்.  திருப்பூரில் இருந்து சொந்த ஊரான தாழம்பள்ளம் கிராமத்திற்கு வந்தால் உறவினர்களுக்கு தெரிந்து விடும் என்பதால் சரத்குமாரின் பெற்றோரிடத்தில் உதவி கேட்டுள்ளனர். சரத்குமாரின் தந்தை மனோகரன், தாய் சாந்தி ஆகியோர் பவானியிடம் ஆறுதலாக பேசி  செங்கல்பட்டு மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா நெல்வாய் கிராமத்தில் வாடகை  வீட்டில் தங்க வைத்து இருந்தனர். அதுவரை பவானியின் பெற்றோர், அவர் வேலை பார்ப்பதாகவே நினைத்துள்ளனர். இதற்கிடையில் பவானி-சரத்குமார் வீட்டிலேயே திருமணம் செய்து கொண்டுள்ளனர்.  நிறைமாத கர்ப்பினியாக இருந்த பவானிக்கு கடந்த ஜனவரி மாதம் 16ந்தேதி  செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

 


இந்த நிலையில், ஊருக்கு தெரியாமல் திருமணமாகமல் குழந்தை பிறந்தால் தவறுதலாகிவிடும் இந்த குழந்தையை வேறு ஒரு நபருக்கு கொடுத்துவிட்டு பின்னர் முறைப்படி நாம் இருவரும், திருணம் செய்து கொள்ளலாம் என்று சரத்குமார் பவானிடம் கூறியுள்ளார். இதை நம்பி பவானி குழந்தையை ஒப்படைத்துள்ளார். யாரோ ஒரு உறவினரிடம் குழந்தையை ஒப்படைக்கப் போவதாக அவர்கள் கூறியுள்ளனர்.  அதன் பின் முறைப்படி திருமணம் செய்து கொள்ள பவானி வலியுறுத்திய நிலையில், சரத்குமார் அதற்கு மறுத்துள்ளார். குழந்தை பற்றி கேட்டதற்கும் சரியான பதிலளிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த மாதம்  சரத்குமாருக்கும் சென்னை திருப்போரூரை சேர்ந்த வேறு பெண்ணிற்கும், திருமணம் ஏற்பாடு செய்வதை அறிந்த, பவானி வந்தவாசி மகளிர் காவல் நிலையத்தில்  புகார் செய்துள்ளார். வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்தனர்.



விசாரணை செய்தததில் சரத்குமார் வந்தவாசி பெரிய காலனியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் மூலம் சென்னையை சேர்ந்த ஜோதி ,கலைவாணி,  அமுல் ,முனியம்மாள் ஆகியோரிடம் குழந்தையை 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு, விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மேலும் போலீசார் விசாரணையில் அந்த குழந்தையை அவர்கள், ஈரோடு பகுதியைச் சேர்ந்த நதியா, நந்தினி , ஜானகி ஆகியோரிடம் விற்பனை செய்துள்ளனர். இப்படி பல ஏஜண்டுகள் மூலமாக குழந்தை கைமாற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீசார் பவானியின் கணவர் சரத்குமார், வந்தவாசி அடுத்த பெரிய காலனியைச் சேர்ந்த ஏழுமலை,  ஈரோடு பகுதியைச் சேர்ந்த நந்தினி ,ஜானகி ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த குழந்தையை மீட்டனர். குழந்தையை விற்பதற்காக இளம் பெண்ணை ஏமாற்றி, பெற்றோருக்கு தெரியாமல் கருத்தரிக்க வைத்து, அந்த சூழலை பயன்படுத்தி குழந்தை பெற்று விற்பனை செய்வதை சரத்குமார் வழக்கமாக கொண்டுள்ளார். இதற்காக ஏழுமலை போன்ற ஏஜெண்டுகள் இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளனர். இது பெரிய நெட்வொர்க் என்பது தெரியவந்துள்ளது. இதே போன்ற இன்னும் பல குழந்தைகள் விற்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான ஜோதி, கலைவாணி, அமுல், முனியம்மா, நதியா ஆகிய 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola