கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடனுக்கும், சுகாதாரத்துறை உட்கட்டமைப்புக்கு மட்டும் ரூ.50,000 கோடி கடனுக்கும் உத்தரவாதம் அளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மேலும், ‘மருத்துவமனைகளில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.100 கோடி வரை கடன் அளிக்கப்படும். 7.95 சதவீதம் வட்டியில் மூன்றாண்டுகளுக்கு இந்த கடன் வசதி அமலில் இருக்கும். பிற துறைகளுக்கான கடன் வட்டி விகிதம் 8.25 சதவீதம் ஆக இருக்கும். தொழில்துறையினருக்கு அவசர கால கடன் உதவியாக ரூ.1.5 லட்சம் கோடி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு உத்தரவாதத்துடன் வங்கிகள் மூலம் தொழில்துறைக்கு கடனுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாட்டு பயணிகளுக்கு சலுகை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா ஏஜென்சிகளுக்கு ரூ.10 லட்சமும், உரிமம் பெற்ற சுற்றுலா கைடுகளுக்கு ரூ.1 லட்சமும் கடன் வழங்கப்படும் ” என்று கூறினார்.
மேலும், குழந்தைகளுக்கான மருத்துவ வசதிகளை வலுப்படுத்த மத்திய அரசு ரூ.23,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். ஆத்மனிர்பர் பாரத் ரோஸ்கர் யோஜனா இப்போது ஜூன் 30, 2021 முதல் மார்ச் 31, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 80,000 நிறுவனங்களைச் சேர்ந்த 21.4 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஏற்கனவே இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர் என்றும் கூறினார்.
மேலும், இந்த ஆண்டு ஏழை மக்களுக்கு இலவசமாக ரேஷன் விநியோகத்திற்கான நிதி செலவு ரூ.93,869 கோடியாக இருக்கும் என்றும், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா திட்டத்திற்காக செலவிடப்பட்ட மொத்த பணம் ரூ .2,27,841 கோடியாக இருக்கும் எனவும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார்.கொரோனா பாதிப்பில் இருந்து மீள கடந்தாண்டு ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், கொரோனா 2வது அலையால் தொற்று பரவல் குறையாமல் மார்ச், மே மாதங்களில் அதிகமாகி வந்தது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடியது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. மேலும், தொற்று பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், தொற்று குறைந்து வருவதால் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்து பாதிப்புகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊரடங்கால் பொருளாதார பிரச்னையும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.