16 அணிகள் பங்கேற்கும் 7ஆவது டி20  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக இந்த போட்டியை இந்தியாவில் நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தப் போட்டிக்கு மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்பதில் பிசிசிஐ ஆர்வமாக இருந்தது. எனவே கொரோனா சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து சரியான முடிவுக்கு வர ஒரு மாத காலம் அவகாசம் வழங்கும்படி பிசிசிஐ சார்பில் ஐசிசியிடம் ஜூன் மாதம் தொடக்கத்தில் வேண்டுகோள் வைக்கப்படுவதாக இருந்தது. 






இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி-20 உலகக்கோப்பை போட்டிகளை ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜே ஷா அறிவித்துள்ளார். துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 14-ம் தேதி டி-20 உலகக்கோப்பை தொடர் தொடங்கி, நவம்பர் 17-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், டி-20 உலகக்கோப்பை தொடர் நடத்தப்படும் அட்டவணை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஐசிசி முறையாக வெளியிடும் எனவும் ஜே ஷா தெரிவித்துள்ளார்.  இத்தகவலை பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதிப்படுத்தியுள்ளார்.


முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 19-ம் தேதி மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடர், அக்டோபர் 15-ம் தேதி வரை நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.






ஐபிஎல் தொடர் நடத்தப்படும் அட்டவணையை வைத்து பார்க்கும்போது. டி-20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னால் ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என தெரிகிறது. எனினும், டி-20 உலகக்கோப்பை நடைபெற இருக்கும் தேதியை ஐசிசி அறிவிக்கும் என பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த மாதம், இந்தியா கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தத் தொடர் வரும் ஜூலை மாதம் 13ஆம் தேதி கொழும்புவில் தொடங்க உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு சென்றதால் இலங்கை தொடருக்கு இளம் வீரர்கள் கொண்ட அணி செல்ல உள்ளது. இந்த அணிக்கு அனுபவ வீரர் ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணிக்கு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.