திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக முனுசாமி என்ற பூசாரி ஆசிரமம் நடத்தி வருகிறார். இவர் ஆசிரமத்திற்கு இளம் பெண்கள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள் பூசாரியிடம் சென்றால், குழந்தை பாக்கியம் திருமணம் ஆகும் என்று நம்பிக்கையில் செல்வதாக கூறப்படுகிறது. 


இந்நிலையில் செம்பேடு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகள் ஹேமமாலினி வயது ( 20 ). இவருக்கு கடந்த 1 ஆண்டுகளுக்கு முன் உடல்நிலை சரியில்லாததால் குடும்பத்துடன், அந்த கோவிலில் உள்ள பூசாரியை முனுசாமி அணுகியுள்ளார். ஹேமமாலினிக்கு நாகதோஷம் இருப்பதாக கூறி அப்பெண்ணை அமாவாசை பவுர்ணமி பூஜை செய்தால் தோஷம் நீங்கும் எனக்கூறி கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 1 1/2  ஆண்டுகளாக அவர் கோவிலில் தங்க வைத்துள்ளார்.  




அதேபோன்று ஹேமமாலினிக்கு அமாவாசை பௌர்ணமி நாட்கள் மட்டுமின்றி,  இரவு நேரத்தில் மாந்திரீகம் செய்து வந்துள்ளார். பூசாரி முனுசாமி கொரோனா காலம் என்பதால் கடந்த ஒன்றரை ஆண்டுகள், மாணவி கல்லூரி  விடுமுறை நாட்களிலும் அங்கேயே சென்று  தங்கி வந்துள்ளார். அதன்பிறகு கல்லூரி திறந்த பிறகு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கோவிலுக்குச் சென்று அங்கேயே தங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது . இந்த நிலையில் கடந்த 13-ஆம் தேதி ஹேமமாலினியை  பூசாரி பூஜைக்கு வருமாறு அழைத்துள்ளார். 11ம் தேதி இரவு 12 மணிவரை பூசாரிக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து கொடுத்துள்ளார் ஹேமமாலினி.





இந்நிலையில் கடந்த  14-ஆம் தேதி விடியற்காலை 4 மணியளவில் ஹேமமாலினி திடீரென்று வாந்தி எடுத்து சோர்வடைந்து உள்ளார். பிறகு அவர் உடல்நிலை கவலைக்கிடம் ஆனதை தொடர்ந்து ஹேமமாலினியின் பெரியம்மா இந்திராணி, பூசாரி முனுசாமியிடம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்யுமாறு கூறி உள்ளார் .  


ஆனால் பூசாரி இரண்டு மணிநேரம் அமைதி காத்து அதன் பிறகு ஆட்டோவை வர வைத்துள்ளார்.  ஆட்டோவில் ஹேமமாலியை வெங்கல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.   அப்போது மருத்துவர்கள் அவர் பூச்சிமருந்து உட்கொண்டு இருப்பதால் அதற்கான சிகிச்சை அளித்தபின் அவரை திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். ஆபத்தான நிலையில் திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஹேமமாலினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.


இதுகுறித்து அவர் தந்தை ராமகிருஷ்ணன் அளித்துள்ள புகார் மனுவில், ”நான் விவசாய கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் அதில் மூத்த மகள் ஹேமமாலினி வ/20 என்பவர் ஒரு தனியார் கல்லூரியில் (பொன்னுசாமி நாடார் கல்லூரி) மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.


இந்நிலையில் கடந்த 13-02-2022-ம் தேதி ஞாயிற்றுகிழமை என் மகளை கொமக்கம்பேடு கிராமத்தை சேர்ந்த இந்திராணி என்பவருடன் என் மகளை அழைத்துக் கொண்டு வெள்ளாத்துக் கோட்டையில் உள்ள ஒரு கோயிலில், இந்திரா என்பவரின் மகள் மகேஸ்வரி வ/25 க/பெ.ஜெகன் என்பவர் அந்த கோயிலில் இருந்ததால் என் மகளை அழைத்து சென்றுள்ளார். மேற்படி அன்று இரவு அந்த கோயிலில் மகேஸ்வரியை பார்த்துவிட்டு அன்று இரவு சாமியார் வீட்டில் என் மகள் தங்கினார். அவருடன் மகேஸ்வரியும் தங்கினார். என் அண்ணியும் அவருடன் வயதானவர்கள் கோயிலில் தங்கிவிட்டார்கள் சாமியார் வீட்டில் என் மகளுடன் மற்ற ஐந்து பெண்கள் அவருடைய வீட்டில் தங்கினார்கள்.




பின்னர் 14-02-2022-ம் தேதி விடியற்காலை சுமார் 4.00 மணிக்கு சாமியார் மனைவி, என் அண்ணியிடம் வந்து ஹேமமாலினி பூச்சி மருந்து குடித்துவிட்டதாக தகவல் சொன்னார் . பின்னர் என் அண்ணி மற்றும் அருகில் இருந்தவர்கள் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தார்கள் . பின்னர் எனக்கு போன் மூலம் தகவல் சொன்னார்கள். நான் அங்கு என் மகளை போய் பார்த்தேன். பின்பு நான் மேல் சிகிச்சைக்காக என் மகளை திருவள்ளூர் அரசு மருத்துமனைக்கு கொண்டு போய் சேர்த்தேன். என் மகள் சிகிச்சையில் இருந்தார். இன்று 16-02-2022-ம் தேதி என் மகள் சிகிச்சை பலனின்றி சுமார் 05.30 மணிக்கு இறந்துவிட்டார். மேற்படி என் மகளின் இறப்பில் சாமியார் மற்றும் அவருடைய மனைவி மீது எனக்கு சந்தேகம் உள்ளது” என புகார் அளித்துள்ளார்.


இதுதொடர்பாக பூசாரி முனுசாமியை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 




எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்க்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050