நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த  நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு சிலர் முறையாக பள்ளிக்கு வராமல் இருந்துள்ளனர். அதோடு சரிவர படிக்காமல் படிப்பில் கவனக்குறைவுடன் செயல்பட்டு வந்துள்ளனர். மேலும் ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபட்டு வந்த நிலையில் பள்ளியில் நடந்த தேர்விலும் மதிப்பெண்கள் குறைவாக எடுத்த நிலையில் அந்த மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர்.


இந்த நிலையில் குறிப்பிட்ட அந்த மாணவர்கள் அந்த ஆசிரியரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் தங்களது புத்தகப்பையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்துள்ளனர். 



நெல்லையில் பயங்கரம்.. ஆசிரியரை தீர்த்துக்கட்ட சதி.. ஆயுதங்களுடன் பள்ளியில் சிக்கிய 3 மாணவர்கள்.. நடந்தது என்ன?


மேலும் மாணவர்கள் ஆயுதங்களுடன் வந்தது குறித்து தலைமை ஆசிரியருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அவர் மாணவர்களின் பைகளை ஆய்வு செய்துள்ளனர், அப்போது புத்தகப்பையில் கத்தி மற்றும் கத்தரிக்கோல் ஆகியவற்றை 3 மாணவர்கள் மறைத்து வைத்துக்கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.


இதனையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் நாங்குநேரி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக பள்ளிக்கு வந்த அவர்கள் மூவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மூன்று மாணவர்களிடம் இருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனை அடுத்து மூவரும் நெல்லை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் நாங்குநேரி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


ஆசிரியர்களை பழி வாங்கும் நோக்கோடு தீர்த்து கட்டுவதற்காக திட்டமிட்டு கத்தியை கொண்டு வந்ததாகவும் தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும் மாணவர்களின் இது போன்ற சமூக விரோத செயல்களால் ஆசிரியர்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதாக ஆசிரியர் வட்டாரங்கள் அச்சமடைந்துள்ளனர்.


நெல்லை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்கள் இடையேயான மோதல் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்போது தனியார் பள்ளியிலும் மோதல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஓராண்டில் வள்ளியூரில் மட்டும் மூன்றாவது சம்பவமாக பள்ளியில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதே போல கடந்த ஜூலை தொடங்கி தற்போது வரை 3-வது சம்பவமாக மாணவர்களுக்கிடையே மோதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.


வள்ளியூர் அருகே தனியார் பள்ளியில் மாணவர் பேரவை தலைவரை தேர்ந்தெடுப்பதில் மோதல் ஏற்பட்டு ஆதி திராவிட மாணவர் மீது மாற்று சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் சாதி ரீதியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்களையும் மனதில் வஞ்சம் கொண்டு பழி தீர்க்கும் மனநிலையில் மாணவர்கள் உள்ளதாக தெரிகிறது.


எனவே மாணவர் சமுதாயத்தை சிறந்த ஒரு தலைமுறைகளாக உருவாக்க வேண்டும் அதற்கான விழிப்புணர்வுகளை மாணவர்களிடையே  ஏற்படுத்த வேண்டும். அதோடு கிராமங்கள் தோறும் சென்று சாதி ஒழிப்பு குறித்தும் சாதிய பாகுபாடு குறித்தும் பெற்றோர்கள் மத்தியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த  வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.