தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். தென்னிந்திய படங்களில் மட்டுமின்றி அட்லியின் இயக்கத்தில் வெளியான 'ஜவான்' படம் மூலம் பாலிவுட் சினிமாவிலும் அறிமுகமாகி நல்ல வரவேற்பை பெற்றார். அதை தொடர்ந்து பல இந்தி பட வாய்ப்புகளும் வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நயன்தாராவின் 75வது படம் என மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் 'அன்னபூரணி'. நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கார்த்திக் குமார், கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையரங்கில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது என்றாலும் நயன்தாராவின் நடிப்பு பாராட்டை பெற்றது.
திரையரங்க ரிலீசுக்கு பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் அதிர்ச்சி தரும் விதமாக நயன்தாராவின் 'அன்னபூரணி' படத்துக்கு எதிர்ப்புகள் எழுந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள் இடம்பெற்று இருந்ததாக மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அதன் எதிரொலியாக சமூக வலைத்தளம் எங்கும் விமர்சனங்கள் எழுந்தன. சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்படும் வரை படத்தை ஓடிடியில் வெளியிட தடை செய்ய கோரிக்கை வைத்தனர். அதன்படி படம் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டது.
இது குறித்து நயன்தாரா விளக்கம் கொடுக்கையில் மக்களை கவர்வது தான் நோக்கமே தவிர புண்படுத்த அல்ல என்றும் அனைத்து மத உணர்வுகளையும் அவர் மதிப்பதாக கூறி மன்னிப்பு கூறியிருந்தார். தற்போது மீண்டும் நாளை (ஆகஸ்ட் 9 ) முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் உள்ள ரசிகர்கள் காணும் வகையில் வெளியாக உள்ளது. சர்ச்சையை ஏற்படுத்திய வசனங்கள் நீக்கப்பட்ட பிறகு இந்திய ரசிகர்களும் பார்க்கும் வகையில் தடை நீக்கப்பட்டு வெளியாகும் என ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் தெரிவித்து இருந்தார்.