இந்தியாவில் சில இடங்களில் சில வினோதமான திருட்டுகள் அரங்கேறுவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் நடந்த திருட்டு சம்பவம் ஒன்று தற்போது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பெண்களின் உள்ளாடைகள்:
திருநெல்வேலியில் சந்திப்பு பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாகும். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக வீட்டுக்கு வெளியில் காயப்போடும் துணிகள் மாயமாகி வந்தது. குறிப்பாக, பெண்கள் அணியும் உள்ளாடைகள் மட்டுமே மாயமாகி வந்தது. இந்த சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வந்ததால் அப்பகுதிவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பெண்களை உள்ளாடைகள் மட்டும் மாயம் ஆவது எப்படி? என்று அப்பகுதி மக்கள் குழப்பம் அடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை அப்பகுதி மக்கள் ஆய்வு செய்தனர். அப்போது, ஒருவர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வெளியில் துவைத்து காயப்போட்டிருக்கும் காயப்போட்டிருக்கும் உள்ளாடைகளை மட்டும் திருடிச் சென்றது தெரியவந்தது.
சிக்கிய தனியார் நிறுவன ஊழியர்:
இதையடுத்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் காவல்நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து, கண்காணிப்பு கேமராவை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் , உள்ளாடைகளை திருடியவர் திருநெல்வேலியில் உள்ள தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த தாணப்பன் என்று தெரியவந்தது.
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் 52 வயதான அவர் வீடு,வீடாகச் சென்று பல பெண்களின் உள்ளாடைகளை திருடியது தெரியவந்தது. இவர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் எதற்காக உள்ளாடைகளை திருடினார்? திருடிய உள்ளாடைகளை என்ன செய்தார்? என்று விசாரணை நடத்தினர்.
52 வயதான தனியார் நிறுவன வீடு, வீடாகச் சென்று பெண்களின் உள்ளாடைகளை திருடியது போலீசார் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.