திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காமராஜர்புரத்தை சேர்ந்தவர் நாகராஜ். அங்கு பேரூராட்சி தூய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் இவருக்கு மணிகண்டன் (25) மற்றும் சபரீஸ்வரன் (13) ஆகிய மகன்கள் உள்ளனர். இதில் மணிகண்டன் என்பவர் லோடு ஆட்டோவில் ஊர் ஊராக சென்று வெங்காயம் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி நெல்லைக்கு வெங்காயம் விற்பனை செய்ய வந்த மணிகண்டனுக்கு உதவியாக அவரது தம்பி சபரீஸ்வரனும் வந்துள்ளார். இருவரும் சுத்தமல்லி அருகே அறை எடுத்து தங்கி வியாபாரம் செய்து வந்துள்ளனர்.
இந்த சூழலில் கடந்த 15 ம் தேதி திண்டுக்கல்லில் இருந்து வெங்காய வியாபாரம் செய்வதற்காக நெல்லை வந்துள்ள அண்ணன் தம்பி இருவரையும் காணவில்லை கண்டுபிடித்து தருமாறு உறவினர்கள் புகார் கொடுத்து உள்ளனர். இதனடிப்படையில் தேடுதலில் இறங்கிய சுத்தமல்லி காவல்துறையினர் நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் கொண்டாநகரம் காட்டுப்பகுதியில் பாழடைந்த மண்டபம் அருகே அண்ணன், தம்பி இருவரும் கொலை செய்யப்பட்டு சடலங்களாக கிடந்ததை கண்டறிந்தனர். இருவரது உடல்களையும் மீட்ட காவல் துறையினர், நெல்லை அரசு மருத்துக் கல்லூரி மருத்துமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த இரட்டைக் கொலை குறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அதில் கொலையான அண்ணன் மணிகண்டன், தம்பி சபரீஸ்வரன் இருவரும் திண்டுக்கல்லில் இருந்து நெல்லை வந்து அறை எடுத்து தங்கி வெங்காய வியாபாரம் செய்து வந்துள்ளனர். இவர்களுடன் கொண்டாநகரம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் அவரது தம்பி பார்த்திபன் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதில் சதீஷ்குமார் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளதாக தெரிகிறது. மேலும் சமீபத்தில் தான் சதீஸ்குமார் கைதாகி சிறையிலிருந்து வெளி வந்துள்ளார். அதேபோல அண்ணன் சதீஷ்குமார், தம்பி பார்த்திபன் இருவருக்கும் கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் அதிகம் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சூழலில் தான் கடந்த 10 ம் தேதி முதலே வெங்காய வியாபாரிகளான அண்ணன், தம்பி இருவரும் காணாமல் போனதாகவும், இருவரின் மொபைல் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் நெல்லையில் வசிக்கும் தங்கள் உறவினர்களை தொடர்பு கொண்டு கடந்த 15ம் தேதி சுத்தமல்லி காவல் நிலையத்தில் அண்ணன் தம்பி இருவரையும் காணவில்லை. வாகனம் மட்டும் அங்கேயே நிற்கிறது என புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணை தொடங்கிய போது தான் கொண்டாநகரம் காட்டுப் பகுதியில் பாழடைந்த மண்டபத்தில் காணாமல் போனதாக புகார் பதிவு செய்யப்பட்ட இருவரின் உடல்களும் சடலங்களாக மீட்கப்பட்டது. மேலும் அங்கு கிடைத்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில் இதில் தொடர்புடைய சதீஷ்குமார் மற்றும் பார்த்திபன் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வரும் சூழலில் கஞ்சா கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் கொலை செய்தனரா? அல்லது தற்பாலினச் சேர்க்கை விவகாரத்தில் இருவரும் கொலை செய்யப்பட்டனரா என இரு கோணங்களிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.