நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அக்னிபாத் ராணுவ ஆட் சேர்ப்பு திட்டத்திற்கான வயது வரம்பை 21 வயதிலிருந்து 23 வயதாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், ஆட் சேர்ப்பு நடைபெறாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், "கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆட்சேர்ப்பை மேற்கொள்ள முடியவில்லை என்பதை உணர்ந்து, 2022 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட ஆட்சேர்ப்பு சுழற்சிக்கு ஒரு முறை விலக்கு அளிக்கப்படும் என்று அரசு முடிவு செய்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 2022ஆண்டிற்கான அக்னிபாத் திட்டத்திற்கான உச்ச வயது வரம்பு 23 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 14 லட்ச பாதுகாப்பு படை வீரர்கள் உள்ள இந்திய ராணுவத்தின் ஆட் சேர்ப்பு திட்டத்தை மத்திய அரசு முற்றிலுமாக மாற்றியமைத்து அறிவிப்பு வெளியிட்ட நிலையில்த செவ்வாய்கிழமை வன்முறை வெடித்தது.
இத்திட்டத்தின் மூலம் ராணுவ வீரர்களின் சராசரி வயது விகிதம் குறைக்கப்பட்டு ஓய்வூதியத்திற்காக செலவு குறைக்கப்படுகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஜார்கண்ட், டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு போராட்டம் விரிவடைந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம், 17.5 வயது முதல் 21 வயது வரையிலான 45,000 இளைஞர்கள், நான்காண்டு பதவி காலத்துடன் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். இந்த பதவி காலத்தில், அவர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, சேர்க்கப்பட்டவர்களில், 25 சதவிகித ராணுவ வீரர்கள் மட்டுமே 15 பதவி காலத்தில் தொடர்வார்கள். மீதமுள்ளவர்கள், 11 லட்சம் ரூபாய் முதல் 12 லட்சம் ரூபாய் வரையிலான தொகையுடன் பணியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். அவர்களுக்கு, எந்த விதமான ஓய்வூதியமும் வழங்கப்படாது. பதவி கால குறைப்புக்கு எதிராக ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுபற்றி விளக்கம் அளித்த மத்திய அரசு, "நான்கு வருட பதவி காலம் முடிந்தவுடன் அவர்களை எந்த வித பாதுகாப்பும் இன்றி விட்டு விட மாட்டோம்" என உறுதி அளித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்