திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வடுகசாத்து கிராமம் நத்தம் ஒட்டவடை தெருவில் கடந்த (09.01.2022) அன்று நள்ளிரவில் மர்ம ஆசாமி ஒருவர் திருட வீட்டில் எகிறி குதித்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பார்த்து சத்தம் போட்டுள்ளார். இதனால் அக்கம்பக்கத்தினர் திரண்டனர். உடனே, மர்ம ஆசாமி தப்பி ஓட முயன்றார். அதற்குள், பொதுமக்கள் மர்ம ஆசாமியை சுற்றி வளைத்து பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பிடிபட்ட மர்ம ஆசாமி ஜட்டி மட்டும் அணிந்து கொண்டு, உடல் முழுவதும் எண்ணெய் தடவிக் கொண்டு, கையில் கையுறை அணிந்திருந்தார்.



இதனால் மர்ம நபர் கை, கால்களை கட்டி போட்ட பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, ஆரணி தாலுகா காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது, மர்ம ஆசாமி வைக்கோல் போரில் மறைத்து வைத்திருந்த சட்டை, பேனா கத்தி, கையுறை உள்ளிட்ட பொருட்களை காவல்துறையிரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். பின்னர், காயம் அடைந்த மர்ம ஆசாமியை பொதுமக்களிடம் காவல்துறையினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


அதனைத்தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்த மர்ம ஆசாமி வேலூர் மாவட்டம் காட்டுப்புத்தூர் கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பதும், இவர் அந்த கிராமத்தில் திருட முயன்றதும் தெரியவந்தது. அதேபோல் இவர் மீது ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.


 


 








மேலும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் சிகிச்சை முடிந்ததும், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதுதவிர, வடுகசாத்து கிராமத்தில் சில தினங்களுக்கு முன்பு கொள்ளை முயற்சி, டிராக்டர் திருட்டில் தொடர்பு உள்ளதா ஆரணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்த திருட்டுகளில் ஈடுபட்டுள்ளாரா  என காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரவில் வீட்டில் புகுந்து திருட முயன்ற ஜட்டி ஆசாமியை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து கட்டிவைத்த தர்மஅடி கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ஊதாரியாக சுற்றிய மகனை நண்பர்களை வைத்தே போட்டுத்தள்ளிய தாய்