தற்போது உலகம் முழுவதும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல்வேறு குற்றச் சம்பவங்கள், தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கிய கண்டுபிடிப்பாக கருதப்படும், மூன்றாம் கண்களாக செயல்படும் சிசிடிவி மூலம் பல்வேறு குற்றச் செயல்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல நடைபெற்ற குற்றங்கள் சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் உடனடியாக குற்றவாளியை கைது செய்து நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக சில குற்றச் செயல்கள் நடைபெற்றாலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலமாக பல்வேறு குற்ற செயல்களை கண்டுபிடிக்க முடிகிறது. அந்தவகையில் பட்டப்பகலில் தன் வீட்டில் கொள்ளை அடிக்க வந்த குற்றவாளிகளை தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் தடுத்துள்ளனர்.




காஞ்சிபுரம் பொன்னேரிகரை அருகே ராஜேஸ்வரி நகர் பகுதியில் ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் திருநாவுக்கரசு என்பவர் 12 வருடங்களாக வசித்து வருகிறார். இவர் நேற்று சென்னையில் அலுவலக வேலைக்காக சென்றபோது பட்ட பகலில் சுமார் 11 மணி அளவில் வீட்டின் வெளியே 3 மர்ம நபர்கள் கையில் பையுடன் வீட்டின் கதவில் தாவி குதித்து உள்ளே சென்றுள்ளார். இதனை வீட்டில் பொருத்தி உள்ள சிசிடிவி கேமரா மூலம் கையில் வைத்துள்ள தொலைபேசியில் நேரலையில் பார்த்த திருநாவுக்கரசு , உடனடியாக வீட்டின் அருகாமையில் உள்ள தனது நண்பரிடம் தொலைபேசியில் மர்ம நபர்கள் என் வீட்டின் அருகே நடமாடுவதை போல் தெரிகிறது என்னவென்று சற்று பார்த்து கூறுங்கள் என தெரிவித்துள்ளார்.

 

இதனை அடுத்து எதிர் வீட்டில் இருந்த திருநாவுக்கரசரின் நண்பர் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்துள்ளார். எதிர் வீட்டிலிருந்து ஒருவர் வெளியே வருவதை பார்த்த மர்ம நபர்கள் உடனடியாக மதில் சுவரை எகிறி குதித்து தப்பி ஓடினர். மர்ம நபர்கள் ஓடியதை கண்ட  திருநாவுக்கரசின் நண்பர் அவர்களை பிடிக்க சென்றுள்ளார். இருந்தும் அவர்கள் மிக வேகமாக ஓடி தப்பித்து உள்ளனர்.



மர்ம நபர்கள் வைத்திருந்த பையில் இரும்பு ராடு, பயங்கரமான ஆயுதங்கள் வைத்துள்ளதாக நேரில் பார்த்தவர் தெரிவித்தனர். பட்டப்பகலில் மர்ம நபர்கள் பையில் பயங்கர ஆயுதங்கள் வைத்து சுற்றி திரியும் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதை அடுத்து பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 

வீட்டின் உரிமையாளர் உடனடியாக தாலுகா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சி வைத்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலமாக பட்டப்பகலில் தன் வீட்டில் நடைபெற இருந்த குற்றச்செயலை திருநாவுக்கரசு சாதுரியமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தியுள்ளனர்.