ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர், செம்பருத்தி. இந்த தொடருக்கு என்று தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரின் நாயகனாக நடித்து வந்த கார்த்திக்ராஜூக்கும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்த்திக்ராஜை செம்பருத்தி தொடரில் இருந்து நீக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.


இந்த நிலையில், நடிகர் கார்த்திக்ராஜ் தனது இன்ஸ்டாகிராமில் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது,


“ அனைவருக்கும் வணக்கம். இந்த வீடியோவில் நான் என்னுடைய அடுத்த ப்ராஜெக்ட் பற்றி பேச வேண்டும் என்று காத்திருந்தேன். ஆனால், என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை. காரணம் என்னை சிலர் எந்த ப்ராஜெக்டும் செய்யவிடாமல் தடுக்கின்றனர். அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்.


சிலர் பின் வேலைகளை செய்து நான் படம் நடிக்கமுடியாதபடி செய்துவிட்டனர். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் உன்னால் முடிந்தால் படம் நடித்துக்காட்டு என்று சவால் விடுகின்றனர். உங்கள் ஆதரவு இருந்தால் கண்டிப்பாக நல்ல படத்தில் நடிக்க என்னால் முடியும். அந்த நம்பிக்கையில் கே ஸ்டூடியோஸ் என்ற ஒரு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். அடுத்த ப்ராஜெக்டை அதில்தான் பண்ண இருக்கிறேன்.




பெரியதாக முதலீடு செய்து பெரிய படம் எடுக்கும் அளவிற்கு எனக்குப் பிண்ணனி இல்லை. என் வாழ்க்கையில் இதுவரை அனைத்துச் சூழ்நிலையிலும் எனக்கு ஆதரவாக இருந்தது நீங்கள்தான். இதுவரை நான் உங்களிடம் எதுவும் கேட்டதில்லை. முதல்முறையாக கேட்கிறேன். சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் உங்களால் எவ்வளவு தொகை முடியுமோ அதை எனக்கு அனுப்புங்கள். நீங்கள் ஆதரவளித்தால்தான் இது முடியும்.”


இவ்வாறு அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார். மேலும். தனது வங்கிக்கணக்கு விவரங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். சின்னத்திரையில் மிகவும் புகழ்பெற்ற இளம்நடிகர் ஒருவர் தன்னை நடிக்க விடாமல் அரசியல் செய்கின்றனர் என்று குற்றச்சாட்டை கூறியிருப்பது கோலிவுட் வட்டாரத்திலும், சின்னத்திரை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




நடிகர் கார்த்திக்ராஜ் கடந்த 2011ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை என்ற தொடர் மூலமாக நடிப்புலகிற்குள் நுழைந்தார். இதையடுத்து, 2013 முதல் 2015ம் ஆண்டு வரை ஆபீஸ் என்ற தொடரில் நடித்தார். 2014ம் ஆண்டு ஜோடி நம்பர் 1 என்ற தொடரில் பங்கேற்றார். பின்னர் 2017ம் ஆண்டு ஜீ தொலைக்காட்சியில் அறிமுகமான செம்பருத்தி தொடரில் நடிக்கத் தொடங்கினார்.


செம்பருத்தி தொடரில் இவர் நடித்த ஆதி கதாபாத்திரம் மிகவும் பிரபலம். 465 என்ற படத்திலும், நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல என்ற படத்திலும் நடித்துள்ளார். இதுதவிர, கடந்தாண்டு ஜீ நிறுவனம் தயாரித்த முகிலன் என்ற தொடரிலும் நடித்துள்ளார். இந்த தொடர் ஜீ5 செயலி மூலம் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.