செல்போன் இணைய செயலி மூலம் மும்பையில் இருந்து அழகியை மாமல்லபுரம் விடுதிக்கு வரவழைத்து உல்லாசம் அனுபவித்து விட்டு பேசிய தொகையை கொடுக்காமல் கத்தியை காட்டி மிரட்டி இளம்பெண்ணிடம் செல்போன், பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது25) என்பவர் உல்லாசம் அனுபவிப்பதற்காக, தனது செல்போனில் மும்பை கால் கேர்ள் என்ற இணைய செயலி மூலம் 22 வயதுள்ள ஒரு பெண்ணை தேர்வு செய்துள்ளார். அதில் இருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தான் மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருப்பதாக கூறி விடுதி அறைகளை படம் பிடித்து வாட்ஸ் மூலம் அந்த பெண்ணுக்கு அனுப்பி சாதுர்யமாக பேசி அவரை நம்ப வைத்துள்ளார்.
ஒரு இரவு உல்லாசத்திற்கு ரூ.20 ஆயிரம் என அப்பெண் கூறியதற்கு, அத்தொகையை தருவதாகவும் கூறி நம்ப வைத்து அப்பெண்ணை விமானம் மூலம் சென்னைக்கு வரவழைக்கிறார். பின்னர் மாமல்லபுரத்திற்கு கால் டாக்ஸி மூலம் அந்த பெண்ணை வர ஏற்பாடு செய்து விடுதிக்கு அழைத்து சென்று ராஜேஷ் உல்லாசம் அனுபவிக்கிறார். பின்னர் அப்பெண்ணிடம், தன் நண்பர்கள் சேலையூரை சேர்ந்த தீனதயாளன் என்கிற தீனா(39), பெரும்பாக்கத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்கிற விஸ்வா(வயது39) ஆகிய 2 பேரை வரவழைத்து அவர்களுடனும் உல்லாசமாக இருக்க வற்புறுத்திறார். அவர்களுடனும் உல்லாசமாக இருக்க அப்பெண் சம்மதிக்கிறார்.
மது அருந்திவிட்டு 3 பேரும் விடிய, விடிய அப்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கின்றனர். காலை விடிந்தவுடன் அந்த இளம்பெண் தான் குறிப்பிட்ட நேரத்தில் மும்பைக்கு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்றும், எனக்கு உடனடியாக பேசிய தொகை ரூ. 20 ஆயிரத்தை கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு ராஜேஷ், தீனா இருவரும் சேர்ந்து அப்பெண்ணை தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி மிரட்டியபடி பணம் கேட்டால் உன்னை இங்கேயே கொன்று புதைத்து விடுவோம். உனக்கு பணம் எல்லாம் கொடுக்க முடியாது. நாங்கள் கொலை வழக்கில் சிறை சென்று வந்த ரவுடிகள் என்று கூறி மிரட்டி உள்ளனர்.
பிறகு கத்தி முனையில், அப்பெண்ணிடம் இருந்து செல்போன், ரூ.3 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து ராஜேஷ், தீனா மற்றும் விஸ்வா ஆகிய 3 பேரும் இரண்டு மோட்டார் சைக்கிள் மூலம் அங்கிருந்து தப்பி சென்று விடுகின்றனர். பிறகு அவர்களிடம் பேசிய தொகையை பெற முடியாமல் ஏமாற்றப்பட்டு, தன்னுடைய செல்போன், பணத்தை பறிகொடுத்த இளம்பெண் அதிர்ச்சியடைந்தார். குறிப்பாக அவர்கள் எடுத்து சென்ற செல்போனில் ஆன்லைன் விமான டிக்கெட் பதிவாகி இருந்ததால், எப்படி மும்பை செல்வது என நிர்கதியாய் பரிதவித்த அப்பெண் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து மாமல்லபுரம் காவல் நிலையம் வந்து புகார் கூறுகிறார்.
அப்பொது மும்பை செல்ல தனது தனது விமான டிக்கட் பதிவாகியுள்ள செல்போனை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து கொடுத்து உதவிடுமாறு போலீசாரிடம் கதறி அழுதார். பிறகு மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் உத்தரவின்பேரில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சி பதிவு மூலம் 3 நபர்களும் திருவிடந்தை வழியாக செல்லும் தகவலை உறுதி செய்து கொண்ட போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்து 3 பேரையும் கைது செய்து மாமல்லபுரம் காவல் நிலையம் அழைத்து வந்து அவர்களிடம் இருந்து அப்பெண் பறிகொடுத்த செல்போன், பணத்தை பறிமுதல் செய்து அவரிடம் கொடுத்து மும்பைக்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு போலீசார் ராஜேஷ், விஸ்வா ஆகிய இருவரிடம் இருந்து 2 கத்தி, இரண்டு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் ராஜேஷ் ஏற்கனவே 2 கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்றும், இவர் மீது சோமங்கலம், குன்றத்தூர், பல்லாவரம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி வழக்குகள் உள்ளது என்றும், அதேபோல் அவரது கூட்டாளி தீனா சென்னை புறநகரில் 2014-ல் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்தவர் என்றும், இவர் மீதும் சிட்லபாக்கம், பீர்க்கன்கரணை, சேலையூர் ஆகிய காவல் நிலையங்களில் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் ரவுடிகள் ராஜேஷ், தீனா மற்றும் விஸ்வா ஆகிய 3 பேரும் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்