ஈரோடு மாவட்டம் பவானி அருகே அமைந்துள்ளது செம்புளிச்சம்பாளையம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவருக்கு வயது 42. இவர் கனடா நாட்டில் உள்ள ஆயில் கம்பெனி ஒன்றில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவகாரத்து கோரி வழக்குத் தொடர்ந்துள்ளனர்.


இந்த நிலையில், பச்சையப்பன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக இணையதளத்தில் விளம்பரம் செய்துள்ளார். அவரது விளம்பரத்தை கண்ட பிரகாஷ் (வயது 42) செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பிரகாஷ் சென்னை பெரம்பூரில் உள்ள வெங்கட்ராமன் தெருவைச் சேர்ந்தவர். பச்சையப்பனிடம் பேசிய பிரகாஷ் தனது தங்கை விதவை என்றும், அவரை திருமணம் செய்துகொள்ள முடியுமா? என்று கூறியுள்ளார்.


பச்சையப்பனும் சம்மதிக்க பிரகாஷ் தனது தங்கையின் செல்போன் எண்ணை அளித்துள்ளார். மேலும், அழகான பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி தனது தங்கை என்றும் பிரகாஷ் கூறியுள்ளார். பச்சையப்பனும் புகைப்படத்தில் உள்ள பெண்தான் பிரகாஷின் தங்கை என்று நம்பியுள்ளார். மேலும், செல்போனிலும் பிரகாஷின் தங்கையிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். ஆனால், பிரகாஷே பெண் குரலில் பேசி பச்சையப்பனிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். மேலும், அவ்வப்போது பணத்தையும் பெற்று வந்துள்ளார்.


பச்சையப்பனும் தான் திருமணம் செய்து கொள்ள உள்ள பெண்தான் என்று நம்பி அவ்வப்போது பண உதவி அளித்து வந்துள்ளார். சுமார் ஒன்றரை கோடி வரை பிரகாஷ் பச்சையப்பனை நம்பவைத்து பணம் பெற்றுள்ளார். இந்த நிலையில், பச்சையப்பன் கனடாவில் இருந்து சென்னை வந்துள்ளார். இங்கு ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கிய பச்சையப்பன் பிரகாஷைத் தொடர்புகொண்டு தங்களது தங்கையை காண வேண்டும் என்றும், அவருக்காக ஏராளமான பரிசுப்பொருட்கள் வாங்கி வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.




ஆனால், பிரகாஷ் அதற்கு பிடி கொடுக்காமல் பேசி வந்துள்ளார். பின்னர், பச்சையப்பன் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலுக்கு சென்றிருந்த பிரகாஷ் அவரை மிரட்டியதுடன் அவர் வாங்கி வந்த எலக்ட்ரானிக் பரிசுப்பொருட்களையும் அபகரித்து சென்றார். அப்போதுதான் பச்சையப்பனுக்கு தன்னிடம் பெண்குரலில் இத்தனை நாட்களாக பேசி வந்தது பிரகாஷ் என்று தெரியவந்துள்ளது. மேலும், அவருக்கு தங்கை என்று யாருமே இல்லை என்பதும் தெரியவந்தது.


தனது தவறை உணர்ந்த பச்சையப்பன் தனது மனைவியிடம் சமரசமாக பேசி மீண்டும் ஒன்று சேர்ந்து விட்டார். மேலும், பிரகாஷ் செய்த மோசடி குறித்தும் சென்னை, ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பச்சையப்பன் அளித்த புகாரின்பேரில் பிரகாஷை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பிரகாஷ் ஒரு எம்.பி.ஏ. பட்டதாரி என்றும், பங்குச்சந்தையில் அவர் ஏராளமான பணத்தை இழந்துவிட்டதால் பச்சையப்பனிடம் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். மேலும், செல்போனில் காட்டப்படும் பெண்ணின் புகைப்படத்தையும், குரலையும் மட்டும் வைத்து வெளிநாட்டில் வேலை பார்த்தவரை எம்.பி.ஏ. பட்டதாரி ஒன்றரை கோடி வரை நூதன முறையில் ஏமாற்றிய சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண