தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரி, மாநிலங்களில் ஆன்லைனில் போதை ஊசியை இளைஞர்களுக்கு விற்பனை செய்த என்ஜினியர் மற்றும் அவருக்கு துணையாக இருந்த பெண் ஒருவரை சின்னமனூர் போலீசார் கைது செய்துள்ளனர்.


தேனி மாவட்டம் சின்னமனூர் நகர் பகுதியில் போதை ஊசி பயன்படுத்தியதாக நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் போதை ஊசி மருந்துகளை ஆன்லைனில் பதிவு செய்து வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது.




மேலும், தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் போதை ஊசிகளை விற்பனை செய்த ஆன்லைன் நிறுவனத்தை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். திருச்சியைச் சேர்ந்த என்ஜினியர் ஜோனதன் மார்க் (30) என்பவர் தனி வலைத்தளம் அமைத்து ஆன்லைனில் விற்பனை செய்வது தெரிய வந்து, அவரை கைது செய்து மேலும் அவருக்கு துணையாக இருந்த புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த வினோதி (35)என்ற பெண்ணும் தொடர் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.




இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், போதை மருந்து விற்பனை செய்வதற்காக தனி வலைதளத்தை உருவாக்கி புனே, சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருந்து நிறுவனங்களில் ரகசிய குறியீட்டினை பயன்படுத்தி மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தும்  ஊக்க மருந்துகளை மொத்தமாக கொள்முதல் செய்துள்ளனர். ஊக்க மருந்தை டாக்டர் பரிந்துரையின் பெயரில் ஒரு சில சிகிச்சைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


ஆனால் அதை ஜோனதன் மார்க் போதை மருந்தாக சென்னை , ஓசூர் தேனி , திண்டுக்கல், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு, திருவனந்தபுரம், மலப்புரம் பகுதியிலும்  மற்றும் புதுச்சேரி மாநிலத்திற்கும் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஊக்க மருந்தை இளைஞர்களுக்கு போதை மருந்தாக விற்பனை செய்து  போதை மருந்து பதிவு செய்யும்  நபர்களுக்கு கூகுள் பே மூலம் பணத்தைப் பெற்றுக் கொண்டு பேருந்துகளில் உறவினர்களுக்கு மருந்து அனுப்புவதாக கூறி அனுப்பி வைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.


அவர்களுடைய மூன்று வங்கி கணக்குகளையும் முடக்கிய போலீசார் அவர்களிடமிருந்து 11 போதை ஊசி மருந்து பாட்டில்கள் அதை செலுத்துவதற்காக வைத்திருந்த நான்கு ஊசிகள் மற்றும் அவர்கள் விற்பனைக்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம், கேரளா மற்றும் பாண்டிச்சேரி மாநில இளைஞர்களுக்கு ஊக்க மருந்தை போதை ஊசி மருந்தாக விற்பனை செய்து இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண