ரோபோக்களை எல்லையில் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தும் வரையில் தற்போது டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. அனைத்துவிதமான வேலைகளுக்கும் ரோபோவை பயன்படுத்த விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை செய்து வருகின்றனர். என்னதான் ஆராய்ச்சி என்றாலும் ரோபோக்களை மனிதர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமென்பதே அனைத்து தரப்பினரின் கருத்து. பலம், உணர்ச்சிகள் என அனைத்தையும் கொடுத்தால் ஒருகட்டத்தில் ரோபோக்கள் மனிதர்களையே கூட எதிர்க்கலாம். சில திரைப்படங்கள் இந்த விபரீத்தையும் பேசியுள்ளனர். ஆனால் உணர்ச்சிகளை ஒரு அளவு வரை ரோபோக்களுக்கு கொடுப்பதால் எந்த சிக்கலும் இல்லை என்றே கூறப்படுகிறது. அதற்கான முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளார் தமிழ்நாட்டு சிறுவன் ஒருவர்






சென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுவன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய ரோபோவை உருவாக்கியுள்ளார். பிரதீக் என்ற அந்த சிறுவன் ரஃபி என்ற அந்த ரோபோவை உருவாக்கியுள்ளார். உடலமைப்பு, ஆற்றல்,திறன் என அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தாலும் ரோபோக்கள் மனிதர்களிடம் இருந்து வேறுபடுகின்றன. அதற்கு காரணம் உணர்ச்சிகள். ரோபோக்களுக்கு உணர்ச்சிகள் கிடையாது. அது சோகமாகாது. சிரிக்காது. கோபப்படாது. ஆனால் அப்படியான சில உணர்ச்சிகளை காட்டும்விதமாக ஒரு ரோபோவை 13 வயது சிறுவன் உருவாக்கியுள்ளார்.
  
உணர்ச்சிகளுடன் கூடிய ரோபோட் என்ற தீமில் இந்த ரோபோவை அந்த சிறுவன் உருவாக்கியுள்ளார். இது குறித்து பேசிய அந்த சிறுவன், ''என்னுடைய கேள்விகளுக்கெல்லாம் ரஃபி பதில் அளிக்கும். நீங்கள் ரஃபி மீது கோபமடைந்து அவனைத் திட்டிவிட்டால் நீங்கள் மன்னிப்பு கேட்கும்வரை அது எந்த பதிலையும் கொடுக்காது. அதேபோல நீங்கள் சோகமாக இருந்தாலும் அந்த ரோபோ கண்டுபிடித்துவிடும். உங்கள் முக பாவனைகளை வைத்தே நீங்கள் சோகமாக இருக்கிறீர்களா என்பதை கண்டுபிடித்துவிடும்.


சிறுவனின் இந்த கண்டுபிடிப்பை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இது தமிழ்நாட்டின் டெக்னாலஜி வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும், முக பாவனைகள் ,குரல் ஆகியவற்றை அடுத்தடுத்த அப்டேட்டாக கொடுக்க வேண்டுமென்றும் கருத்து பதிவிட்டுள்ளனர். இது குறித்து பதிவிட்டுள்ள இன்னொருவர், சோகமான முகத்தைக் காட்டவும், சந்தோஷ முகத்தைக் காட்டவும் முக பாவனைகளை உருவாக்கி இருக்கலாம். அதற்கான பயிற்சிகளை கொடுக்கலாம். ஆனாலும் 13 வயது சிறுவனின் இந்த சாதனை அசாத்தியமானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.