தேனி மாவட்டம் தேவாரம் அருகே ஆடு விற்றது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் 65 வயதுடைய பெண்ணை கட்டையால் அடித்து கொலை செய்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள தே.மீனாட்சிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அழகம்மாள் (65). திருமணமாகாதவர். இவருக்கும், 17 வயது சிறுவனுக்கும் இடையே ஆடு விற்றது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சிறுவன் ஆத்திரம் அடைந்த நிலையில் அங்கிருந்த கட்டையை எடுத்து அழகம்மாளை சரமாரியாக தாக்கினான். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து சிறுவன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான். இதுகுறித்து தகவல் அறிந்த தேவாரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனா். பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடினர். அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். ஆடு விற்ற சம்பவத்தில் பெண்ணை கட்டையால் அடித்து சிறுவன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தோட்ட வேலைக்கு சென்ற வாலிபர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள அம்மச்சியாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த பால்பாண்டி மகன் அய்யணன் (18). கூலித்தொழிலாளி. இவர் விவசாய தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றபோது அங்கு மின் இணைப்பு வயர்கள் சுருண்டு கிடந்ததாக கூறப்படுகிறது. இதனை சரிசெய்த போது அவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து அவரது தந்தை பால்பாண்டி க.விலக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்