இந்த மழைக்காலத்தில் உப்பு நீர் கொப்பளித்தல் அளவற்ற பயன்களை நமக்கு நிச்சயம் அளிக்கும்


உப்பு நீரால் வாய் கொப்பளிப்பது என்பது இன்று நேற்று அல்ல ஆரம்ப காலங்களில் இருந்தே நம் முன்னோர்களால் பின்பற்றப்பட்டு வரும் ஒரு ஆரோக்கிய முறையாகும். இது அவர்களின் நாளாந்த வாழ்க்கையில் நடைமுறையில் இருந்ததை நாம் அவதானிக்க கூடியதாகவே இருந்தது .
அதிகாலையில் துயில் விட்டு எழுந்ததும் முதலில் உப்பு நீரால் தான் வாயை கொப்பளிப்பார்கள், அதேபோல் இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னர், இரவு உணவை முடித்ததும் இறுதியாக உப்புநீரால் வாயை கொப்பளிப்பார்கள். ஆகவே இது வாயை கொப்பளிப்பது மட்டுமல்ல அடி தொண்டை வரை  உப்பு நீரால் கழுவுவார்கள். ஒரு ஆறு ஏழு தடவை உப்பு நீரால் நன்கு தொண்டையை  சுத்தப்படுத்திவிட்டு தான் இரவு தூக்கத்திற்கு செல்வார்கள்.


இவ்வாறு ஆரோக்கியமாக இருந்தவர்கள் எந்த நோய் தொற்றும் இல்லாமல் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள். ஆனால் காலப்போக்கில் இந்த உப்பால் வாய் கொப்பளிப்பது தொண்டையை கழுவுவது போன்ற செய்முறைகள் பழக்கத்தில் இல்லாமல் போனது. ஆனால் இன்றும் ஒரு சில ஊர்களில் இந்த பழக்கம் இருப்பதை நாம் காணக்கூடியதாகவே இருக்கிறது.


 உப்பு ஒரு நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட  சிறந்த மருந்தாகும். என்னதான் நோய்க்கிருமிகள் தாக்கினாலும்  நின்று எதிர்த்துப் போராடக்கூடிய தன்மை உப்புக்குள்ளது. உடலினுள் நோய்க்கிருமிகள் நுழையாத வண்ணம் அதன் வாசலிலேயே அதாவது மூக்கு, வாய் அந்த இடத்திலேயே நோய் கிருமிகளை கொன்றழிக்கும் சக்தி இந்த உப்புக்கு உள்ளது. இன்றும் பலர் உப்பு நீரால் வாய் கொப்பளிப்பதை வீடுகளில் கடைப்பிடித்து   வருகின்றனர்.


வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன்  உப்பை கலந்து, வாயில் வைத்து சிறிது நேரம் கொப்பளிப்பதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். இந்த வாய்வழி சுகாதார சிகிச்சை குறித்து பள்ளியில் இருந்து சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது.


உப்பு நீரால் வாயை கொப்பளிக்கும் போது எண்ணிலடங்காத நன்மைகளை நாம் பெறலாம். முதலில் வாயில் நுழையும் பாக்டீரியாவை எதிர்த்து இந்த உப்பு போராடுகிறது. பல் வலி, அதேபோல் தொண்டையில் கட்டும் சளி தொந்தரவையும் சரி செய்கிறது இந்த உப்பு . டான்சில்ஸ் நோய் இருப்பவர்கள் தொடர்ந்து இந்த உப்பு நீரால் தொண்டையை கழுவி வரும் பட்சத்தில் அந்த கட்டிகள் வாழ்நாளில் மீண்டும் வராது என கூறப்படுகிறது. இது ஊர் பகுதிகளில் மக்களால் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. டான்சில்ஸ் நோய்க்கு பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தாலும் வீட்டில் இருக்கும் இந்த சிறிய அளவு உப்பை கொண்டு சிறிதளவு நிவாரணம் பெறலாம்


அது மட்டுமல்லாமல் நாசியில் ஏற்படும் அடைப்பு, சுவாச குழாயில் ஏற்படும் சளி தொந்தரவையும் இந்த உப்பு நீர் சரி செய்கிறது. உப்பு நீர் வாய் கொப்பளிப்பதன் மூலம் மூக்கடைப்பு , தொண்டை வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கலாம். 


பாக்டீரியாவை நீக்குகிறது:


சில நிமிடங்கள் உப்புநீரை வாய் வைத்து கொப்பளிப்பதன் மூலம், பாக்டீரியாக்கள் உடலினுள் நுழையாதவாறு தடுக்கலாம். தொண்டையின் அடிப்பகுதியில் படிந்திருக்கும் தேவையில்லாத பாக்டீரியாக்களை இந்த உப்பு வெளியேற்றி விடும்.ஆரோக்கியமான pH ஐ பராமரிப்பதன் மூலம் தொற்று நோய்க் கிருமிகளின்  வளர்ச்சி தடுக்கப்படுகிறது.


வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது:


பலருக்கு ஏற்படும் வாய் துர்நாற்றத்தை போக்க  இந்த உப்பு நீரால் வாய் கொப்பளிப்பது ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது. இந்த வாய் துர்நாற்றம் என்பது வாய் சுத்தமின்மையாலும் ,உணவு உட்கொள்ளலாலும் ஏற்படுகிறது. வாய்வழி பாக்டீரியாவால் ஏற்படக்கூடும் இவ்வாறான துர்நாற்றம் ஈறு அழற்சி போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக இந்த உப்பு நீர் செயல்படுகிறது. என்னதான் மருந்துகள் பாவித்தும் வாய் துர்நாற்றம் போகவில்லை என கூறுபவர்கள் , ஒரு நாளைக்கு இருமுறை காலை மற்றும் இரவு வேளையில் தொடர்ந்து உப்புநீரால் வாயை கொப்பளித்து வரும் பட்சத்தில் துர்நாற்றம் குறைக்க வாய்ப்புண்டு.


 பொதுவாக வாய் கொப்பளிப்பதற்கு இயற்கையாக கிடைக்கும் கடலுப்பை தான் பயன்படுத்த வேண்டும். அதாவது  நன்கு வெள்ளையான, பெரிய அளவிலான கடலுப்புதான் இந்த வாய் கொப்பளிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த இயற்கையான உப்பு தான் நோய்க்கிருமிகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் தன்மையை கொண்டிருக்கிறது.  அதேபோல் ஆயுர்வேத ,சித்த மருந்துகளிலும் இந்த உப்பு தான் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. நமது வீடுகளிலும் உணவுகளில் முக்கியமாக  இந்த கடல் உப்பைத் தான்  பயன்படுத்த வேண்டும்.


மேலும் தற்போது கடைகளில் பட்டை தீட்டப்பட்ட உப்பு தான் அதிகளவில் கிடைக்கின்றன. இந்த உப்பு சுத்திகரிக்கப்படுவதால் இதில் இயற்கையாக இருக்கும் நோய் எதிர்ப்பு பண்புகள் இல்லாமல் போய்விடுகிறது. ஆகவே இதனை பயன்படுத்துவதால் உடலுக்கு எந்த நன்மையும் வரப்போவதில்லை. அதே போல் நோயை எதிர்த்து போராடும் தன்மையும் இந்த உப்பில் இல்லாமல் போகிறது. இதில் கலக்கப்பட்டுள்ள ரசாயனம் உடலில் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.


அடிநா அழற்சி எனப்படும் டான்ஸில் கட்டிக்கு சிறு நிவாரணம்..


அதாவது அடிநா பகுதியில் தொண்டையின் இரு புறத்திலும் இந்த டான்சில் கட்டிகள் இயற்கையாகவே இருக்கின்றன. உடலில் அதிகளவான சூடு, ஏதாவது நோய்க்கிருமிகள் அதிக அளவில் தாக்கினால் முதலில் காட்டி கொடுப்பது இந்த டான்சில் கட்டிகள் தான். ஆகவே இந்த டான்சில் கட்டிகளை தாண்டி தான் பாக்டீரியாக்களோ நோய்க்கிருமிகளோ, உடலினுள் நுழைய வேண்டும். இந்த டான்சில் கட்டிகளில் நோய் கிருமிகள் படியும் போது இருபுறமும் வீக்கம் ஏற்பட்டு உணவு உண்ண முடியாமல் அதிகளவான வலியை ஏற்படுத்தும். ஆகவே இந்த உப்பினால் நாம் தொண்டையை ,வாயை கொப்பளிக்கும் போது இந்த டான்சில் கட்டிகளின் வீக்கம் படிப்படியாக குறைந்து அதில் இருக்கும் நோய்க்கிருமிகள் தடுக்க வாய்ப்புள்ளது. இதனால் தான் நம் முன்னோர்கள் ஒரு நாளைக்கு இருமுறையாவது அடித்தொண்டையை உப்பு நீரால் கழுவ வேண்டுமென கூறி வந்தனர்.


வறட்டு இருமலை சரி செய்கிறது:


வறட்டு இருமல் மற்றும் சளியுடன் கூடிய இருமல் இரண்டையும் உப்பு நீரில் வாய் கொப்பளிப்பதன் மூலம் குணப்படுத்தலாம். இந்த உப்பு மற்றும் சுடுதண்ணீரின் கலவையானது அழற்சி எதிர்ப்பு மருந்தாக செயல்படுகிறது.  இது அடி தொண்டையில் படிந்திருக்கும் கிருமிகளை அழித்து இருமலை நிறுத்தலாம்.


வாய்ப் புண்களை ஆற்றும்:


வாயில் ஏற்படும் புற்று புண்கள் அல்லது வாய்ப்புண்களை உப்பு நீர் கொண்டு கொப்பளிக்கும் போது அவை இல்லாமல் போய்விடும்.  உணவு உண்ணும் போதெல்லாம் ஒருவித வலி, எரிச்சலையும், அசௌகரியத்தையும் இந்த வாய்ப்புண்கள் ஏற்படுத்துகின்றன. உடலில் ஏற்படும் அதிகளவான சூடு ,உணவு காரத்தன்மை, உடலுக்கு ஒத்துக்காத உணவு வகைகள், நோய்க்கிருமிகளின் தாக்கம், பற்களால் கடிபடுவது என பல்வேறு காரணங்களால் வாயில் புண்கள் ஏற்படுகின்றன. ஆகவே இவற்றுக்கான நிரந்தர தீர்வு இந்த உப்பு நீரால் வாயை கொப்பளிப்பதாகும். உப்பு நீர் கொண்டு வாயை கொப்பளிப்பதன் மூலம் புண்கள் மிக விரைவாக  குணமடைவதை நாம் காணலாம்