திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளது சென்னமநாயக்கன்பட்டி ஏழுமலையான்நகர். இங்கு வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி கலைச்செல்வி (42). இவர் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் சிராஸ்தாராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 7ம் தேதி ரவிச்சந்திரன், தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு கோவையில் உள்ள தனது மகனை பார்க்க சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், காம்பவுண்டு சுவர் வழியாக ஏறி குதித்து வீட்டுக்குள் வந்தனர்.
பின்னர் அவர்கள், வீட்டுக்கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அதன்பிறகு வீட்டில் இருந்த பீரோவை திறந்தனர். அதில் இருந்த பொருட்களை அள்ளி வெளியே போட்டு பணம், நகைகளை தேடினர். அப்போது பீரோவில் 20 பவுன் தங்க நகைகள் இருந்தது. அதனை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இந்தநிலையில் கோவையில் இருந்து ரவிச்சந்திரன், கலைச்செல்வி ஆகியோர் நேற்று காலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த நகைகள் திருடப்பட்டிருந்தது.
OPS: கோடநாடு கொலை வழக்கை கிளரும் ஓபிஎஸ்.. ஆகஸ்ட் 1 ஆம் தேதி மாநில அளவில் போராட்டம்..!
இதுகுறித்து தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் கலைச்செல்வி புகார் செய்தார். அதன்பேரில், திண்டுக்கல் தாலுகா போலீசார் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதேபோல் மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது, வீட்டில் இருந்து மோப்பம்பிடித்தபடி படிகளில் ஏறி மாடிக்கு சென்று சோதனை செய்தது. திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த துணிகர சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதற்கிடையே அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்