வடமாநிலங்களில் கடந்த வாரம் முதல் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வானிலையில் ருத்ரதாண்டவம் டெல்லி, பஞ்சாப், இமாச்சல் பிரதேசம், உத்ரகாண்ட் ஆகிய மாநிலங்களில் அரங்கேறி வருகிறது. இதில் மிகவும் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் என்றால் அது இமாச்சல் பிரதேசம் தான். இந்த மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 


இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), இன்று அதாவது ஜூலை 11ஆம் தேதி இமாச்சல் மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கு  "சிவப்பு" மற்றும் "ஆரஞ்சு" எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக மழையால் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சலப் பிரதேசத்திற்கு பாதிப்பு அளவு இன்னும் அதிகரிக்ககூடும் என்ற அச்சம் அம்மாநில மக்களை தொற்றியுள்ளது. 


அடுத்த 24 மணி நேரத்திற்கு சோலன், சிம்லா, சிர்மௌர், குலு, மண்டி, கின்னவுர் மற்றும் லாஹவுல் ஆகிய இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், உனா, ஹமிர்பூர், காங்க்ரா மற்றும் சம்பா ஆகிய இடங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கு மண்டி, கின்னவுர் மற்றும் லாஹவுல்-ஸ்பிடி ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது" என்று மூத்த ஐஎம்டி விஞ்ஞானி சந்தீப் குமார் சர்மா ஏற்கனவே நேற்று அதாவது ஜூலை 10ஆம் தேதி தெரிவித்தார்.


இமாச்சலப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் திங்களன்று, மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருவதாகவும், உயிர் இழப்புகள் மற்றும் பொது உள்கட்டமைப்பு சேதம் குறித்து கவலையடைவதாகவும் கூறினார்.


தற்போது இமாச்சல சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் தாக்கூர், ஊடகங்களிடம் ”12 பெரிய பாலங்கள் சேதமடைந்துள்ளது, ஹிமாச்சலப் பிரதேசம்அதன் வரலாற்றில் இதுபோன்ற மழையைப் பார்த்ததில்லை" என்று கூறினார்.


"கடந்த சில ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நாங்கள் பார்த்ததில்லை. மாநிலத்தில் நிலவும் நிலைமை குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். பல பெரிய மற்றும் சிறிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, அடுத்த சில நாட்களுக்கு நிலைமை நீடித்தால், மேலும் சேதம் ஏற்படலாம், " என ஆவர் கூறினார்.


இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டது, சாலைகள் துண்டிக்கப்பட்டது, பாலங்கள் சேதமடைந்தன. மாநிலத்தில் கடந்த 48 மணி நேரத்தில் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.


ரூபாய் 3,000 கோடி முதல் ரூபாய் 4,000 கோடி வரை மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு இழப்பு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் மாநிலத்தின் சில பகுதிகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். 


இதற்கிடையில், இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு நேற்று, கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற கனமழையைப் பார்த்ததில்லை என்று  ஊடகங்களில் கூறினார்.


பிரதமர் நரேந்திர மோடி, திங்களன்று, இமாச்சல் முதல்வருடன் நிலவும் நிலைமை குறித்துப் பேசினார். அப்போது இமாச்சல் மாநிலத்திற்கு தேவையான உதவிகளைச் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகக் கூறினார்.