தமிழ்நாட்டில் ஆன்லைனில் சூதாட்டம், விளையாட்டு என பலவற்றில் ஈடுபட்டு மக்கள் பலர் விரக்தியில் உயிரிழக்கும் நிலையினை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். ஆனால் இன்னமும் திருந்தியப்பாடில்லை என்று தான் கூற வேண்டும். மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறும், தொழில்நுட்ப மாறுதல்களுக்கு ஏற்ப மோசடி செய்யும் விதத்தினையும் மாற்றி வருகின்றனர்.  இப்படியான ஆசை வலையில் பலரும் மாட்டிவருகின்றனர்.  இந்நிலையில் மதுரையில் ஆன்லைன் திருட்டு விழிப்புணர்வால் பெண் ஒருவர் தப்பியுள்ளார். மதுரை மேல அனுப்பானடியைச்  சேர்ந்த ஜெயலட்சுமி வங்கி கணக்கிற்கு குடும்ப செலவிற்காக நேற்றைய தினம் அவரது மகன்  6ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்துள்ளார்.



இதனையடுத்து வீட்டில் அருகில் இருந்த வங்கி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றபோது ஏ.டி.எம் ப்ளாக் செய்யப்பட்டதாக இயந்திரத்தில் வந்துள்ளது. இதனையடுத்து வீடு திரும்பிய நிலையில் திடிரென அங்கீகரிக்கப்படாத செல்போன்  எண்ணிலிருந்து வந்த அழைப்பில் உரையாடிய வடமாநில நபர் தங்களது கார்டு பிளாக் செய்யப்பட்டதாக கூறிய நிலையில் அவர் வங்கி தொடர்பான முழு விவரங்களையும் அளித்துள்ளார். இதனையடுத்து சுதாரித்துகொண்ட ஜெயலட்சுமி வங்கி மோசடி என தெரியவந்த நிலையில் உடனடியாக அவசரவசரமாக ஓடி சென்று வீட்டின் அருகில் இருந்த மற்றொரு ஏ.டி.எம்மில் வங்கி கணக்கில் குறைந்தபட்ச தொகையான  500ரூபாய் தவிர்த்து மீதியுள்ள 5500 ஆயிரம் ரூபாய் பணத்தை மட்டும் எடுத்துள்ளார். இதனையடுத்து வங்கி மோசடி கும்பல் மீண்டும் ஜெயலட்சுமியை தொடர்புகொண்டு ”ஏன் வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுத்தீர்கள்” என கூறி தகாதவார்த்தைகளால் திட்டியுள்ளனர்.  மேலும் உங்களது வங்கி கணக்கில் உள்ள மினிமம் பேலன்ஸ்சில் உள்ள பணத்தை இப்போதே எடுக்கிறேன் பார்க்கிறாயா என இரும்புத்திரை திரைப்படத்தில் வரும் காட்சியை போல மிரட்டிய அடுத்த நொடியிலயே ஜெயலட்சுமியின் வங்கி கணக்கிலிருந்து 500 ரூபாய் பிரதம மந்திரி நிவாரண நிதி எடுத்துள்ளதாக கூறி பணத்தை மோசடியாக எடுத்துள்ளனர். 




இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி வங்கியை தொடர்புகொண்டு புகார் அளித்த நிலையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கூறி அறிவுறுத்தியுள்ளனர். ஆன்லைன் மூலமாக வங்கி பண மோசடியில் ஈடுபடும் கும்பலானது உச்சகட்டமாக பெண்ணுக்கு மிரட்டல் விடுத்ததோடு சவால் விடுத்து சினிமா பாணியில் வங்கியிலிருந்த பணத்தை பிரதமர் நிதி என்ற பெயரில் மோசடியாக எடுத்தது குறித்து ஜெயலட்சுமி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆன்லைன் மோசடி குறித்து சிறிதளவு விழிப்புணர்வுடன் இருந்ததால் ஜெயலட்சுமி துரிதமாக செயல்பட்டு பணத்தை எடுத்ததால் வங்கி பணம் முழுமையாக எடுக்கப்படுவது தடுக்கப்பட்டது.