குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பெற்றுத்தர வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட குடும்ப தலைவருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும், அறிவிப்பில்லாத மின் வெட்டை சரி செய்ய வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதிமுகவினர் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்ததன் அடிப்படையில் இன்று திருவாரூரில் அதிமுக மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமையில் நகர ஒன்றிய மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து வீதிகளிலும் வீடுகள் தோறும் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என நன்னிலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், திருவாரூர் அதிமுக மாவட்ட செயலாளருமான காமராஜ் தெரிவித்துள்ளார். கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் டாக்டர் கோபால், முன்னாள் நகரமன்ற தலைவர் சிவா.இராஜமாணிக்கம், கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலியபெருமாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் காமராஜ் சட்டமன்ற உறுப்பினர் பேசியதாவது...
அதிமுக எதிர்க்கட்சியாக உள்ளது என்பதால் எங்களுக்கு சோர்வு ஏற்பட்டதில்லை. நாளை மீண்டும் ஆளுங்கட்சியாகும் என்ற நம்பிக்கையோடு எழுந்து நிற்கிறோம். மக்கள் மனதிலிருந்து அதிமுகவை என்றைக்கும் அழிக்க முடியாது. அதிமுகவிற்கு தேய்மானம் என்பது கிடையாது. விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகளிலும், 7 பேரூராட்சிகளிலும் அதிமுக வெற்றி பெறும். தமிழகத்தில் அதிகமான ஆண்டுகள் அதிமுக ஆளும் கட்சியாக இருந்துள்ளது. அப்போதெல்லாம் நீதியின் படியும், சட்டத்தின் படியும் மட்டுமே ஆட்சி நடைபெற்றது.
மேலும் தமிழகத்தில் மின்வெட்டே இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியாக இருந்து வந்த நிலையில், தற்போது திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தொடர்ந்து மின்வெட்டு அதிக அளவில் இருந்து வருகிறது. இதற்கு காரணம் தற்பொழுது மின் கம்பிகளில் அணில் கட் பண்ணுகிறது, பின்னர் எலி கட் பண்ணுகிறது, என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுவார் என காமராஜ் கிண்டல் செய்தார். மக்கள் பிரச்சினைகளை மையமாக வைத்து அதை தீர்வு காண்பதற்கான ஆட்சியாக அதிமுக ஆட்சி இருந்தது. தற்போது திமுகவின் ஆட்சியில் மக்கள் வேதனைக்கு ஆளாகி வருகின்றனர். காவிரி டெல்டா பகுதியில் நடைபெறும் குறுவை விவசாயத்தை பாதுகாப்பதற்கான வகையில் உரம், பூச்சி மருந்துகள் போதிய அளவில் இல்லை. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள். அதுபோல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்கப்படும் என்று சொன்னார்கள். இந்தத் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்படவில்லை.
மேட்டூர் அணையை ஜூன் 12ஆம் தேதி திறந்து விட்டால் மட்டும் போதும் என்று திமுக அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. தேவையான தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். ஆனால் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் காய்ந்து வருகிறது. இதனை சரி செய்ய வேண்டிய திமுக அரசு கொரோனா பேரிடரை காரணம் காட்டி நழுவி வருகிறது. ஆனால் அதே நேரத்தில் அதிமுக நிர்வாகிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் மட்டும் ஆர்வம் காட்டுகிறது. இவைகளையெல்லாம் கண்டித்து, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பெற்றுத் தர வேண்டும். நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்து தரவேண்டும். திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் ஜூலை 28ஆம் தேதி பதாகைகளை ஏந்திய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து வீதிகளிலும் வீடுகள் தோறும் நடைபெறும். வீதிக்கு மூன்று இடம் என பிரித்து கொரோனா நோய்த்தொற்று சமூக இடைவெளியுடன் கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களும், நடுநிலையாளர்களும் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு நன்னிலம் சட்டமன்றத் காமராஜ் தெரிவித்தார்.