திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் பைத்தியக்காரன் போல் வேடமிட்டு பகலில் விவசாய நிலங்களில் சுற்றித்திரிந்து விவசாய நிலங்களில் கட்டி வைத்துள்ள பசுமாடுகளையும் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை நோட்டமிட்டு செல்கிறார்கள். பிறகு இரவு நேரத்தில் நான்கு சக்கர வாகனத்தில் வந்து பசு மாடுகளை திருடி வாகனத்தில் ஏற்றி கடத்தி செல்லும் நிகழ்வுகள் தொடந்து வந்துள்ளது.
கலசப்பாக்கம் அருகே உள்ள பெரியகிளாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் அருகில் ஒரு பசுமாடு கட்டி வைக்கப்பட்டு இருந்தது. இரவில் பைத்தியக்காரன் போல் வேடமிட்டு வந்த வடமாநில இளைஞர் அந்த மாட்டை அவிழ்த்துள்ளார். யார் இந்த இளைஞன் மாட்டை எதற்கு அவிழ்க்கிறார், என்று அங்கிருந்த யாழினி என்பவர் சென்று வடமாநில இளைஞரை தட்டிக்கேட்டுள்ளார். நாம் மாட்டிக் கொண்டோம் என்ற எண்ணத்தில் ஆத்திரம் அடைந்த வடமாநில இளைஞர் தான் வைத்திருந்த இரும்புக்கம்பியால் யாழினியை தாக்கினான். இதனால் அதிர்ச்சி அடைந்த யாழினி அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை கூச்சலிட்டு அழைத்து வந்து, மாடு திருட முயன்ற பைத்தியக்காரன்போல் இருந்தவனை சுற்றி வளைத்து பிடித்து ஒரு இடத்தில் கட்டிப்போட்டனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கலசபாக்கம் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வடமாநில இளைஞரிடம் விசாரித்தனர். அவன், பார்ப்பதற்கு வெளிமாநிலத்தைச் சேர்ந்தவன் போல் இருந்தான். அவன் கழுத்தில் பல்வேறு கயிறுகள், தாயத்துகளை அணிந்திருந்தான். அவன் வைத்திருந்த பையில் செல்போன், மற்றும் கூர்மையான கம்பிகள் இருந்துள்ளது. பின்னர் அந்த இளைஞர் இந்தியில் பேசியதால் காவல்துறையினருக்கு புரியவில்லை. அவனை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விடுங்கள் எனக் கிராம மக்களிடம் கூறி விட்டு காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்து நழுவி சென்று விட்டனர். அவனை, எங்களால் அழைத்து வர முடியாது, எனக் கிராம மக்கள் கூறினர். அதற்கு காவல்துறையினர், நாங்கள் மட்டும் எப்படி அவனை அழைத்துச் செல்வது என்றும், இவன் ஒரு பைத்தியக்காரன், அவனை விட்டு விடுங்கள் என்றும் கூறி விட்டு அங்கிருந்து காவல்துறையினர் சென்று விட்டனர். மாடு திருடியவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தும், காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் சென்று விட்டதால், அப்பகுதி கிராம மக்கள் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.