மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஈசானிய தெரு பகுதியை சேர்ந்தவர் 35 வயதான தனசேகரன். இவர் வைதீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பன்னீர்செல்வம் நகரை சேர்ந்த தனசேகரன் உறவினர்களுக்கும், அதே பகுதியில் உள்ள தேவேந்திரன் மகன் 20 வயதான பிரதீப் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.




இது தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு சமாதானமாக சென்றுள்ளனர். இந்நிலையில் பிரதீப் அவரது உறவினரான கொண்டத்தூர், தெற்கு பண்டாரவடை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் 35 வயதான அமிர்தராஜ் என்பவருடன் வந்து தனசேகரன் உறவினர் வீட்டில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.




இது குறித்து தகவல் அறிந்த காவலர் தனசேகரன் விரைந்து வந்து பிரதீப் மற்றும் அமிர்தராஜ் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த காவலர் தனசேகரன் கட்டையால் மற்றும் கம்பியால் பிரதீப் மற்றும் அமிர்தராஜ் ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த இருவரும் அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர்.  உடனடியாக அவர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள்  மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 




இதனைத்தொடர்ந்து அமிர்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார்,  சீர்காழி ஈசானித் தெருவை சேர்ந்த 47 வயதான பாபு மற்றும் காவலர் தனசேகரன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் தனசேகரன் கொடுத்த புகாரின் பேரில் பிரதீப், அமிர்தராஜ் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருதரப்பினர் இடையே விசாரணை நடத்தினர்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


இந்நிலையில் காவலர் தனசேகரன், பிரதீப் மற்றும் அமிர்தராஜ் ஆகிய இருவரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து காவலர் தனசேகரன் மற்றும் அவரது உறவினர் பாபு இருவர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 341, 294பி, 324, 307, 506, IPC r/w 3(1)(r), 3(1)(s), 3(2)(va) SC/ST POA Act உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நாகப்பட்டினம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


சீர்காழியில் இரும்பு கம்பியால் தாக்கியதல் 2 பேருக்கு சிகிச்சை - காவலர் மீது வழக்குப்பதிவு