தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டை கிராமம் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் ராக்கன். முன்னாள் ராணுவ வீரர். இவரது மகன் மகாலிங்கம் (50) விவசாயி. இவர் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். இந்நிலையில் அவருடைய இறுதிச் சடங்கு நடைபெற்று,  பின்னர் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, வீரியங்கோட்டை ஆதிதிராவிடர் தெருவில் இருந்து முடச்சிக்காடு செல்லும் சாலையில் உள்ள ஆதி திராவிடர்களுக்கான மயானத்திற்கு செல்லும் பாதையின் குறுக்கே கல்லணை கால்வாயின், கிளை பாசன வாய்க்கால் உள்ளது.


அந்த வாய்க்காலில், தற்போது அதிகமாக தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. அதனை பொருட்ப்படுத்தாமல், இறந்தவரின்,  சடலத்துடன் உறவினர்கள் வாய்க்காலில் இறங்கி அதனை கடந்து மறுபுறம் சென்று, சுடுகாட்டில், மகாலிங்கம் உடலுக்கு இறுதி நிகழ்ச்சிகளை  செய்தனர். இதனால் அக்கிராம மக்கள் மிகவும் வேதனைக்குள்ளாகியுள்ளனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இது போன்ற நிலைஇருப்பது குறித்து, எந்த அதிகாரியும் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையான விஷயமாகும்.


எனவே, மாவட்ட நிர்வாகம், வீரியங்கோட்டை கிராமம் ஆதிதிராவிடர் தெருவில் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லும் வகையில், பாலம் அமைத்து தர வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்,


வெயில் காலங்களிலும், வாய்க்காலில் தண்ணீர் வராதபோதும் வாய்க்காலில்  இறங்கி மறுகரைக்கு கொண்டு சென்று இறுதிச் சடங்குகள் நடத்தி வருகின்றோம். மழை காலங்களிலும், வாய்க்காலில் தண்ணீர் வரும் போதும், சடலத்தை வாய்க்காலை கடந்து மறுபுறம் கொண்டு செல்ல அவதிப்பட்டு வருகிறோம்.  இது போன்ற அவல நிலையால், வருடந்தோறும் வாய்க்காலில் தண்ணீர் வரும், இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லும் அவலம் குறித்து, மாவட்ட நிர்வாகத்திடம் புகைப்படத்துடன், பாலம் கட்டித்தரவேண்டும் என புகாரளிப்போம். அதன் பிறகு அதிகாரிகள், கடமைக்காக வந்து பார்வையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி விட்டு சென்றுவிடுவார்கள். அதன் பிறகு வாய்க்காலில் தண்ணீர் வராமல் போய் விடும், நாங்களும் அப்படியே விட்டு விடுவோம்.




 சில நேரங்களில் வாய்க்காலில் அதிகமாக தண்ணீர் வந்தால், உடலை எடுத்து செல்வதற்குள் பெரும் சிரமத்துக்குள்ளாகி விடும். நீச்சல் தெரிந்த இளைஞர்கள் என ஒரு சிலர் சென்று விடுவார்கள். ஆனால் முதியவர்கள், சிறுவர்கள் கரையில் அமர்ந்து விடுவார்கள். இதனால் இறுதி நிகழ்ச்சியை கூட நிம்மதியாக செய்ய முடியாத நிலை உள்ளது. சாலை வழியாக சென்றால் சுமார் 5 கிலோ மீட்டர் துாரம் சுற்றி செல்ல வேண்டியிருப்பதால், ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் இயற்கை எய்தினால், கூடுதலாக செலவாவதால், வேறு வழியில்லாமல் வாய்க்காலில் இறங்கி செல்கின்றனர் என்பது வேதனைக்குரியதாகும்.


கடந்த ஐம்பது ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வருவதால், எங்களின் நிலையை எந்த அதிகாரியும் கண்டு கொள்ளவில்லை. எங்களின் ஊரில் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல வேண்டுமானால், இறந்த சோகத்தை விட, அந்த உடலை எடுத்து சென்று இறுதி நிகழ்ச்சி செய்வதற்குள் பெரும் மனஉளைச்சலுக்குள்ளாகி வருகின்றோம். எனவே,  கடந்த 50 ஆண்டுகளாக பாலம் கேட்டு கோரிக்கை வைத்துள்ள நிலையில், தற்போது வந்துள்ள தமிழக அரசு, வாய்க்காலின் குறுக்கே உடலை எடுத்து செல்லும் வகையில், காங்கீரீட் பாலம்  அமைத்து தந்தால் சடலத்தைக் கொண்டு செல்ல வசதியாக இருக்கும்  என்று தெரிவித்தனர்.